கரும்பு நிலுவைத் தொகை ரூ.408 கோடியை மாவட்ட நிர்வாகம் பெற்றுத் தர வேண்டும்: விவசாயிகள் வலியுறுத்தல்

சர்க்கரை ஆலைகளிடம் இருந்து கரும்பு நிலுவைத் தொகை ரூ.408 கோடியை கடலூர் மாவட்ட நிர்வாகம் பெற்றுத் தர வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர். 


சர்க்கரை ஆலைகளிடம் இருந்து கரும்பு நிலுவைத் தொகை ரூ.408 கோடியை கடலூர் மாவட்ட நிர்வாகம் பெற்றுத் தர வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர். 
தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் கடலூர் மாவட்ட கூட்டுக் குழு கூட்டம் கடலூரில் மாவட்டத் தலைவர் ஜி.ஆர்.ரவிச்சந்திரன் தலைமையில் அண்மையில் நடைபெற்றது. மாநில துணைத் தலைவர் டி.ரவீந்திரன், மாவட்ட செயலர் கோ.மாதவன், பொருளாளர் எஸ்.தட்சிணாமூர்த்தி, விவசாய தொழிலாளர்கள் சங்க மாவட்ட செயலர் எஸ்.பிரகாஷ், மாவட்டத் தலைவர் எஸ்.கே.ஏழுமலை, பொருளாளர் வி.செல்லையா ஆகியோர் பேசினர்.
கூட்டத்தில், விவசாய பொருள்களுக்கு கட்டுப்படியான விலை கிடைத்திடும் வகையில், எம்.எஸ்.சுவாமிநாதன் குழு பரிந்துரையை அமலாக்க வேண்டும். விவசாயிகளின் அனைத்து வகையான கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும். நெய்வேலி 3-ஆவது சுரங்க விரிவாக்கம், ஹைட்ரோ கார்பன் திட்டம், 4 வழிச் சாலை உள்ளிட்ட திட்டங்களை கைவிட வேண்டும்.
வீராணம், வெலிங்டன், பெருமாள் ஏரி உள்ளிட்ட ஏரி, குளம், வாய்க்கால்களை மராமத்து செய்ய வேண்டும். 2016 முதல் 2018-ஆம் ஆண்டு வரையிலான பயிர்க் காப்பீட்டுத் தொகையை வழங்க வேண்டும். பெண்ணாடம், இறையூர், நெல்லிக்குப்பம் சர்க்கரை ஆலைகள் கரும்பு விவசாயிகளுக்கு பாக்கி வைத்துள்ள ரூ.408 கோடியை மாவட்ட நிர்வாகம் பெற்றுத்தர வேண்டும். அரசு அறிவித்த ஊக்கத் தொகையை ஆரூரான் சர்க்கரை ஆலை வழங்கிட அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். பணம் வழங்காத தனியார் சர்க்கரை ஆலைகளை அரசே ஏற்று நடத்த வேண்டும். படைப்புழு தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்காச்சோளப் பயிருக்கு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் இழப்பீட்டை விதை வழங்கிய நிறுவனம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மேலும், இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 
8-ஆம் தேதி கடலூர், காட்டுமன்னார்கோவில், திட்டக்குடி, புவனகிரி, கீரப்பாளையம் மையங்களிலும், 9-ஆம் தேதி விருத்தாசலம், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, பரங்கிப்பேட்டை, குமராட்சி, நடுவீரப்பட்டு ஆகிய மையங்களிலும் மறியல் போராட்டம் நடத்துவது என்றும் முடிவெடுக்கப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com