சுடச்சுட

  

  நெய்வேலி என்எல்சி நிறுவனத்தின் இரண்டாம் அனல் மின் நிலையம் மிகச்சிறந்த செயல்பாட்டுக்கான தேசிய விருதைப் பெற்றது. 
  என்எல்சி இந்தியா நிறுவனம் செயல்படுத்தி வரும் அனல்மின் நிலையங்களில் இரண்டாம் அனல் மின் நிலையம் 1980-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. தலா 210 மெகாவாட் திறனுள்ள 7 மின் உற்பத்திப் பிரிவுகளைக் கொண்டுள்ளது. 
  தென்கிழக்கு ஆசியாவில் பழுப்பு நிலக்கரியில் இயங்கும் மிகப் பெரிய அனல்மின் நிலையமான இங்கு, மணிக்கு 14.70 லட்சம் யூனிட் வரை மின் உற்பத்தி செய்யமுடியும். இந்த மின் நிலையத்தின் குளிரூட்டும் கோபுரங்களுக்கு வழங்கப்படும் நீரைப் பயன்படுத்தி, நீர் செலுத்தப்படும் பாதையில் மணிக்கு 20 யூனிட் மின்சாரம் தயாரிக்கும் சிறிய அளவிலான புனல் மின் நிலையம் அமைக்கப்பட்டிருப்பது உலகில் எந்த அனல்மின் நிலையத்திலும் இல்லாத ஒன்றாகும். 
  மேலும், அனல்மின் நிலைய வளாகத்தில் பசுமை சூழலைப் பராமரித்தல் உள்ளிட்ட காரணிகளை அடிப்படையாகக் கொண்டு ஆய்வு செய்த நிலையில், மத்திய நீர்ப் பாசனம் மற்றும் மின் சக்தி வாரியம் என்எல்சி இந்தியா நிறுவனத்தின் இரண்டாம் அனல்மின் நிலையத்தை சிறந்த அனல்மின் நிலையமாகத் தேர்வு செய்து விருது வழங்கியுள்ளது. தில்லியில் அண்மையில் நடைபெற்ற மத்திய நீர்ப் பாசனம் மற்றும் மின்சக்தி வாரியத்தின் 90-ஆவது ஆண்டு விழாவில் இந்த விருது என்எல்சி இந்தியா நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது. 
  மத்திய மின் சக்தி, நவீன மற்றும் புதுப்பிக்கவல்ல எரிசக்தித் துறை இணைஅமைச்சர் (தனிப் பொறுப்பு) ராஜ்குமார் சிங் விருதை வழங்க, என்எல்சி இந்தியா நிறுவனத் தலைவர் ராக்கேஷ் குமார், மின் துறை இயக்குநர் வி.தங்கபாண்டியன், அனல் மின் நிலையங்களின் தலைமைப் பொதுமேலாளர் காசிநாதன், இரண்டாம் அனல்மின் நிலையப் பொது மேலாளர் கனகலிங்கம் ஆகியோர் பெற்றுக் 
  கொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai