சுடச்சுட

  

  கீழணை பாலத்தில் மீண்டும் பேருந்துகளை இயக்குவது குறித்து சென்னை இந்திய தொழில்நுட்ப நிறுவனப் பேராசிரியர் தலைமையிலான குழுவினர் திங்கள்கிழமை ஆய்வு செய்தனர்.
  காட்டுமன்னார்கோவில் அருகே அமைந்துள்ள கீழணையின் மேல்பகுதி வழியாக தஞ்சை, அரியலூர், கடலூர், நாகை, திருவாரூர் சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன. கடந்த 2010-ஆம் ஆண்டு அணை பாலத்தின் மேல்பகுதியில் விரிசல் ஏற்பட்டதால், அணையின் பாதுகாப்பு கருதி பேருந்துகள் இயக்குவது நிறுத்தப்பட்டது. பின்னர், பாலம் சீரமைக்கப்பட்டு 2013-ஆண்டு மீண்டும் போக்குவரத்து தொடங்கியது.  ஆனால், பாலத்தில் மீண்டும் விரிசல் ஏற்பட்டதால் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. தொடர்ந்து, பாலம் முழுமையாக சீரமைக்கப்பட்டு போக்குவரத்து தொடங்கியது. 
  இந்த நிலையில், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மீண்டும் பேருந்து போக்குவரத்து முன்னறிவிப்பின்றி நிறுத்தப்பட்டது. பாலத்தின் உறுதித் தன்மை குறித்து வல்லுநர்கள் ஆய்வு செய்த பிறகே போக்குவரத்துக்கு அனுமதிக்கப்படும் என பொதுப் பணித் துறையினர் தெரிவித்தனர். இந்த நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் காவிரி டெல்டா பாசனப் பகுதி பொதுப் பணித் துறை முதன்மைச் செயலர் பாலாஜி கீழணையில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் கூறுகையில், அணையை விரைவில் வல்லுநர் குழு ஆய்வு செய்யும் எனவும், மிகவும் பழைமையான அணை என்பதால் அதன் கீழ் பகுதியில் மற்றொரு அணை கட்டுவது குறித்தும் ஆலோசனை நடைபெறுவதாகவும் தெரிவித்தார். 
  அதன்படி, கீழணை பாலத்தில் பேருந்து, கனரக வாகனப் போக்குவரத்தை மீண்டும் தொடங்குவதற்கான முதல் கட்ட ஆய்வு திங்கள்கிழமை நடைபெற்றது. சென்னை இந்திய தொழில்நுட்ப நிறுவனப் பேராசிரியர் எஸ்.அருள்ஜெயச்சந்திரன் தலைமையிலான குழுவினர் ஆய்வுப் பணியில் ஈடுபட்டனர். அவர்கள் பாலத்தின் கீழ் பகுதி மற்றும் ஷட்டர்களின் உறுதித் தன்மை, இயந்திரங்களின் செயல்பாடு உள்ளிட்டவை குறித்து பொதுப் பணித் துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர்.
   ஆய்வின்போது சிறப்பு தலைமைப் பொறியாளர் எஸ்.பாலசுப்பிரமணியன், சிதம்பரம் செயற்பொறியாளர் பி.பாபு, அணைக்கரை உதவி செயற்பொறியாளர் எஸ்.அருணகிரி, உதவி பொறியாளர் டி.வெற்றிவேல் ஆகியோர் உடனிருந்தனர்.  கீழணை பாலத்தில் வாகனங்களை இயக்கி தொழில்நுட்ப கருவிகளின் உதவியுடன் உறுதித் தன்மையை ஆய்வு செய்ய மற்றொரு குழுவினர் வர இருப்பதாகவும் பொதுப் பணித் துறையினர் தெரிவித்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai