சுடச்சுட

  

  சிறப்பு மருத்துவ முகாம் நடத்தக் கோரி மாற்றுத் திறனாளிகள் போராட்டம்

  By DIN  |   Published on : 08th January 2019 08:49 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகள் சங்கத்தினர்  திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர். 
  கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் நாள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டரங்கின் அருகே மாவட்ட மாற்றுத் திறனாளிகளின் லட்சிய முன்னேற்றச் சங்கத்தினர் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவர் சி.கே.சந்தோஷ் தலைமை வகித்தார்.  
  மாற்றுத் திறனாளிகளின் ஊனத்தை பரிசோதித்து அதனடிப்படையில் தேசிய அடையாள அட்டை வழங்குவதற்காக ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்படுவது வழக்கம். ஆனால், கடந்த சில வாரங்களாக இந்த மருத்துவ முகாம் பல்வேறு காரணங்கள் கூறப்பட்டு நடைபெறவில்லை.  இதனால், மாற்றுத் திறனாளிகள் தேசிய அடையாள அட்டை பெறமுடியாமல் சிரமத்துக்கு உள்ளாகின்றனர். 
  இதனைக் கருத்தில் கொண்டு உடனடியாக மருத்துவ முகாமை நடத்த வேண்டும். தமிழக அரசு மாற்றுத் திறனாளிகள் அலுவலகம் மூலமாக தொழில் தொடங்குவதற்கு ரூ.25 ஆயிரம் மானியம் வழங்குகிறது. 
  ஆனால், இந்தத் திட்டத்தில் வங்கிகள் கடன் வழங்க மறுப்பதோடு, மாற்றுத் திறனாளிகளை அலைக்கழித்து வருவது குறித்து ஆட்சியர் விசாரணை நடத்தி உடனடியாக கடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெற்றது. 
  இதில் பங்கேற்ற மாற்றுத் திறனாளிகள் தங்களது நெற்றியில் நாமம் தரித்திருந்தனர்.
  மாவட்ட பொதுச் செயலர் பொன்.சண்முகம், பொருளாளர் ஆர்.தட்சிணாமூர்த்தி, மகளிரணி தலைவி  எஸ்.சித்ரா, நிர்வாகிகள் எம்.ஆறுமுகம், தனுஷ்பத்மா, ஆர்.பாலமுருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai