சுடச்சுட

  

  தொழிற்சங்கத்தினர் வேலைநிறுத்த போராட்டம்: சாலை மறியலில் ஈடுபட்ட 336 பேர் கைது

  By DIN  |   Published on : 09th January 2019 08:21 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தொழிற்சங்கத்தினரின் வேலைநிறுத்தப் போராட்டத்தையொட்டி, கடலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மறியலில் ஈடுபட்ட 336 பேர் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனர்.
  மத்திய, மாநில அரசுகளின் தொழிலாளர் விரோதப் போக்கைக் கண்டித்து தொழிற்சங்கங்கள் சார்பில் 2 நாள் அகில இந்திய வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதன்படி, கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தொழிற்சங்கத்தினர், விவசாய சங்கத்தினர் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம், மறியலில் ஈடுபட்டனர்.
  சிஐடியூ, தொமுச, ஏஐடியூசி, ஐஎன்டியூசி, எச்எம்எஸ், ஏஐயுடியுசி ஆகிய தொழிற்சங்கங்கள் சார்பில் கடலூர் உழவர் சந்தை அருகே மறியல் போராட்டம் நடைபெற்றது. சிஐடியூ மாநில துணைப் பொதுச்செயலர் வி.குமார் தலைமையில் தொழிற்சங்கத்தினர் மறியலில் ஈடுபட்டனர்.  இதில் பங்கேற்ற 32 பெண்கள் உள்பட 190 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். 
  இதேபோல, புவனகிரி, காட்டுமன்னார்கோவில், கீரப்பாளையம் ஆகிய பகுதிகளில் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் இணைந்து மறியலில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்டதாக மொத்தம் 71 பெண்கள் உள்பட 336 பேர் கைது செய்யப்பட்டனர்.
  வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட காப்பீட்டு கழக ஊழியர்கள், வங்கி ஊழியர்கள் தங்களது கோரிக்கையை வலியுறுத்தி கடலூர் வட்டத் தலைவர் எஸ்.மீரா தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். எல்ஐசி இன்சூரன்ஸ் ஊழியர் சங்க செயலர் கே.பி.சுகுமார் முன்னிலை வகித்தார். வங்கி ஊழியர் சங்கம் மாவட்டத் தலைவர் எஸ்.ஸ்ரீதரன், இந்தியன் வங்கி ஊழியர் சங்க உதவி செயலர் ஆர்.குருபிரசாத், ஓய்வூதியர் சங்கம் கே.திருமலை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
  அதிகாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பி.கே.வி.ரமணி கூறியதாவது:  இந்த போராட்டத்தில் எஸ்பிஐ வங்கியைத் தவிர மீதமுள்ள 150 அரசுடமையாக்கப்பட்ட வங்கிக் கிளைகளின் ஊழியர்கள் பங்கேற்றனர். எனினும், அதிகாரிகள் அளவில் உள்ளவர்கள் பங்கேற்கவில்லை. இதனால், பணம் பரிவர்த்தனை ரூ.20 கோடி அளவுக்கு பாதிக்கப்பட்டது. காசோலை பரிவர்த்தனை நடைபெற்றது என்றார்.
  எல்ஐசி இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் கோட்டத் தலைவர் மணவாளன் கூறுகையில், எல்ஐசியைப் பொருத்தவரையில் வேலூர் கோட்டத்தில் 20 கிளைகளில் பிரீமியம் வசூலிப்பு, புதிய வணிகம், பாலிசிதாரர் சேவையில் பாதிப்பு ஏற்பட்டது. எனினும், அதிகாரிகள் வழக்கம் போல் பணியில் ஈடுபட்டனர் என்றார்.  
   போராட்டத்துக்கு ஆதரவாகவும், மின்சார சட்டத்தை திருத்துவதை கைவிட வலியுறுத்தியும் கடலூர் செம்மண்டலத்தில் உள்ள மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகம் முன் தமிழ்நாடு மின் ஊழியர்கள் ஜனநாயக முன்னணி சார்பில் வேலை நிறுத்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத்தின் மாவட்டத் தலைவர் கே.சண்முகம் தலைமையில் மாவட்ட செயலர் ஜெ.முருகையன், பொருளாளர் இ.பாவாடைசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கம், ஏஐடியூசி சங்கத்தினர் இணைந்து கடலூர் திருப்பாதிரிபுலியூர் ரயில் நிலையம் அருகில் ஏஐடியூசி மாவட்ட செயலர் எம்.சேகர் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அரசுப் பணியாளர் சங்க சிறப்புத் தலைவர் கு.பாலசுப்ரமணியன் சிறப்புரையாற்றினார். மாநில துணைத் தலைவர் கு.சரவணன், முன்னாள் மாவட்ட செயலர் மு.ராஜாமணி, ஏஐடியூசி மாவட்ட செயலர் ஜெகரட்சகன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகர செயலர் ஜி.மணிவண்ணன், தனியார் பேருந்து தொழிலாளர் சங்கம் குரு.ராமலிங்கம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
   வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர், தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கத்துடன் இணைந்து மாவட்ட ஆட்சியர் பழைய அலுவலகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். இவ்வாறு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் தொழிற்சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai