நெல் பயிரில் குலைநோய் மேலாண்மை

நெல் பயிரில் குலைநோய் மேலாண்மை குறித்து கடலூர் மாவட்ட வேளாண்மைத் துறை ஆலோசனை வழங்கியது.

நெல் பயிரில் குலைநோய் மேலாண்மை குறித்து கடலூர் மாவட்ட வேளாண்மைத் துறை ஆலோசனை வழங்கியது.
இதுகுறித்து மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் சி.அண்ணாதுரை வெளியிட்ட செய்திக்குறிப்பு: கடலூர் மாவட்டத்தில் நடப்பு சம்பா பருவத்தில் 90 ஆயிரம் ஹெக்டேரில் நெல் சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவற்றில் சுமார் 40 ஆயிரம் ஹெக்டேரில் பிபிடி-5204 வகை நெல் நேரடி விதைப்பாகவும், நடவாகவும் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. 
தற்போதைய நிலையில் நெல் பயிரானது கதிர் நிலையிலிருந்து அறுவடை நிலை வரை உள்ளது. இந்தச் சூழலில் தற்போது இரவு வெப்பநிலை குறைவாக உள்ளதாலும், அதிகப்படியான பனிப் பொழிவின் காரணமாகவும் குலைநோய் தாக்குதலுக்கு சாதகமான சூழ்நிலை நிலவுகிறது. மாவட்டத்தில் இந்த நோய் தாக்குதலுக்கான அறிகுறி காட்டுமன்னார்கோவில், குமராட்சி, மேல்புவனகிரி, கீரப்பாளையம், பரங்கிப்பேட்டை ஆகிய வட்டாரங்களில் காணப்படுகின்றன.
நோய் அறிகுறிகள்: நெல் பயிரின் இலை, கழுத்து, கணுப் பகுதிகளில் இந்த நோயின் தாக்கம் காணப்படும். 
இலைகளின் மேல், வெண்மை நிறத்திலிருந்து சாம்பல் நிற மைய பகுதியுடன் காய்ந்த ஓரங்களுடன் கூடிய கண்வடிவ புள்ளிகள் காணப்படும். பல புள்ளிகள் ஒன்று சேர்ந்து ஒழுங்கற்ற திட்டுக்களை உருவாக்கும். கழுத்துப் பகுதியில் சாம்பல் நிறம் முதல் பழுப்பு நிற புள்ளிகள் தோன்றி கருப்பு நிறமாக மாறி கதிர்மணிகள் சுருங்கியும், பகுதி நிறைந்தும், கதிர்கள் உடைந்து தொங்கியபடியும் காணப்படும். இதை கழுத்து குலைநோய் என்கிறோம்.  பயிரின் அடிப் பகுதியில் இடைக்கணு தாக்குதலும் ஏற்படுவதால் வெண்கதிர் அறிகுறி தோன்றும். கதிரின் பருவ நிலைக்கு முன்பே கழுத்துப் பகுதியில் நோய் தாக்கினால் தானியங்கள் உருவாகாது. கதிர் பருவத்துக்கு பின் தாக்குதல் ஏற்பட்டால் தானியம் உருவானாலும் குறைந்த தரத்துடன் காணப்படும்.
எனவே, வயல் வரப்புகளில் உள்ள களைச் செடிகளை முற்றிலும் அகற்றி தூய்மையாகப் பராமரிக்க வேண்டும். பரிந்துரைக்கப்படும் அளவிலேயே தழைச் சத்து உரமான யூரியாவை இட வேண்டும். நோய்த் தாக்குதல் அறிகுறிகள் தென்பட்டால் ட்ரைசைகலசோல் மருந்தை ஏக்கருக்கு 200 கிராம் வீதம் 200 லிட்டர் நீரில் கலந்து தெளிப்பதன் மூலம் இந்த நோயைக் கட்டுப்படுத்தலாம். மேற்கூறிய பயிர்ப் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் குலைநோயால் பாதிக்கப்பட்டுள்ள பயிர்களை விவசாயிகள் பாதுகாத்துக்கொள்ளலாம் என்று அதில் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com