தொழில்சங்கத்தினர் 2ஆம் நாளாக போராட்டம்

அகில இந்திய வேலைநிறுத்தத்துக்கு ஆதரவாக புதன்கிழமை கடலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தொழில்சங்கத்தினர் 2ஆம் நாளாக போராட்டம் நடத்தினர்.

அகில இந்திய வேலைநிறுத்தத்துக்கு ஆதரவாக புதன்கிழமை கடலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தொழில்சங்கத்தினர் 2ஆம் நாளாக போராட்டம் நடத்தினர்.
மத்திய அரசு, தொழிலாளர் விரோதப் போக்கைக் கடைப்பிடித்து வருவதாகக் கூறி, தொழில்சங்கத்தினர் ஜனவரி 8, 9  ஆகிய தேதிகளில் அகில இந்திய அளவிலான வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறும் என அறிவித்திருந்தனர். அதன்படி, செவ்வாய்க்கிழமை போராட்டம் நடைபெற்றது. இரண்டாவது நாளாக புதன்கிழமையும் கடலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டம் நடைபெற்றது.
எனினும் அரசு, தனியார் பேருந்துகள், ரயில்கள், வாடகை வாகனங்கள், ஆட்டோக்கள் வழக்கம் போல இயங்கின.
அரசு அலுவலகங்கள், அரசு, தனியார் பள்ளி, கல்லூரிகளும் முழுமையாகச் செயல்பட்டன. 
வங்கி, தபால், காப்பீட்டு நிறுவனம், பி.எஸ்.என்.எல். நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர் சங்கங்களைச் சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பணிகள் பாதிக்கப்பட்டன.
போராட்டத்துக்கு ஆதரவாக கடலூர் பெரியார் அரசு கலைக் கல்லூரிப் பேராசிரியர்கள் இரண்டு நாள்களும் கோரிக்கை அட்டைகளை அணிந்து பணியாற்றினர். புதன்கிழமை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு தமிழக கல்லூரி ஆசிரியர் கூட்டு நடவடிக்கைக் குழுவின் கிளைத் தலைவர் லூ.ஹென்றி தலைமை வகித்தார். கிளைச் செயலர் ஜெ.சக்கரவர்த்தி, மண்டலத் துணைத் தலைவர் ப.பாவாடை ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேராசிரியர் இரா.திலக்குமார் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினார்.
இதேபோல, கடலூர் போக்குவரத்துப் பணிமனை எதிரே  தொமுச, சிஐடியு, பாட்டாளி தொழில்சங்கம், மறுமலர்ச்சி தொழிலாளர் முன்னணி, தேமுதிக தொழில்சங்கம், ஏஏஎல்எல்எப் ஆகிய தொழில்சங்கங்கள் சார்பில் மறியல் நடைபெற்றது. 
இந்தப் போராட்டத்துக்கு பாட்டாளி தொழில்சங்கத் தலைவர் ஜெய்சங்கர் தலைமை வகித்தார்.  ஐஎன்டியூசி நிர்வாகி சாமிநாதன், சிஐடியு துணைப் பொதுச் செயலர் கண்ணன், தொழிலாளர் முன்னணி கருணாநிதி, மதிமுக தொழில்சங்கச் செயலர் கிருஷ்ணமூர்த்தி, தொமுச நிர்வாகி ஜெயராவ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நெய்வேலி: இதேபோல, நெய்வேலியில் நடைபெற்ற மறியலில் சிஐடியு, தொமுச, ஏஐடியுசி, யுடியுசி, எச்எம்எஸ் சங்கங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். 
தொடர்ந்து, மெயின் பஜார் பகுதியில் இருந்து புறப்பட்ட பேரணிக்கு சிஐடியு தலைவர் வேல்முருகன் தலைமை வகித்தார். தோமுச தலைவர் வீர.ராமச்சந்திரன் பேரணியைத் தொடக்கி வைத்தார். சிஐடியு மாவட்டப் பொருளாளர் குப்புசாமி, ஏஐடியுசி பொதுச் செயலர் வெங்கடேசன், எம்எம்எஸ் தலைவர் மணி, யுடியுசி மாவட்ட கவுன்சிலை சேர்ந்த பாபு ஆகியோர் கண்டன உரையாற்றினர். வட்டம் 19-இல் உள்ள தபால் நிலையம் அருகே பேரணி நிறைவு பெற்றது. தொடர்ந்து அங்கு, சிஐடியு பொதுச் செயலர் ஜெயராமன், தொமுச பொதுச் செயலர் சுகுமார் ஆகியோர் பொது வேலைநிறுத்தப் போராட்டம் குறித்துப் பேசினர். இதையடுத்து, மறியலில் ஈடுபட்ட 92 பேரை போலீஸார் கைது செய்து, மாலையில் விடுவித்தனர். 
பண்ருட்டியில்...: பண்ருட்டி பயணியர் விடுதியில் இருந்து  தொழில்சங்கத்தினர் பேரணியாகச் சென்று, பண்ருட்டி நான்கு முனை  சந்திப்பில் மறியலில் ஈடுபட்டனர். 
சிஐடியு மாவட்டச் செயலர் பி.கருப்பையன் தலைமையில் நடைபெற்ற மறியலில் மின் ஊழியர் மத்திய அமைப்பு, டிஎன்எஸ்டிசி, சுமைப்பணி, கட்டுமானம், கைத்தறி, ஆட்டோ, மாட்டுவண்டி  தொழில்சங்கம், பித்தளை பாத்திரம், சாலையோர சிறுகடை வியாபாரிகள் சங்கம், மாதர் சங்கம், பூ கட்டும்  சங்கங்களில் இருந்து 100-க்கும்  மேற்பட்டோர் பங்கேற்றனர். மறியலில் ஈடுபட்டவர்களை  கைது செய்த போலீஸார், அவர்களை மாலையில் விடுவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com