சுடச்சுட

  

  சிதம்பரம் போக்குவரத்து காவல் நிலையத்துக்கு ரூ.58 லட்சத்தில் புதிய கட்டடம்

  By DIN  |   Published on : 11th January 2019 08:48 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  சிதம்பரத்தில் ரூ.58.56 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள நகர போக்குவரத்து காவல் நிலைய கட்டடம் வியாழக்கிழமை திறக்கப்பட்டது. 
   சிதம்பரம் நகர காவல் நிலைய வளாகத்தில் ரூ.58.86 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள போக்குவரத்து காவல் நிலையம், கருவேப்பிலங்குறிச்சி காவல் நிலையம் ஆகியவற்றின் புதிய கட்டடங்களை தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி சென்னையில் இருந்து வியாழக்கிழமை காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார். இதையடுத்து, சிதம்பரம் நகர போக்குவரத்து காவல் நிலைய புதிய கட்டடத்தை, கடலூர் மாவட்ட எஸ்பி ப.சரவணன் குத்துவிளக்கேற்றி தொடக்கி வைத்தார். 
   விழாவில் சிதம்பரம் டிஎஸ்பி ஆர்.பாண்டியன், போக்குவரத்து காவல் ஆய்வாளர் எஸ்.விஜயகுமார், சட்டம் - ஒழுங்கு காவல் ஆய்வாளர் கே.குமார், போக்குவரத்து உதவி ஆய்வாளர்கள் எஸ்.மகாலிங்கம், ஏ.செல்வ விநாயகம், தனிப் பிரிவு உதவி ஆய்வாளர் என்.ரகு, தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி வாரிய உதவி செயற்பொறியாளர் கே.ராஜாமணி, உதவிப் பொறியாளர் கே.ராஜாமணி, ஒப்பந்ததாரர்கள் ஜி.அமிர்தலிங்கம், ஏ.விஷ்ணுவர்மன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
   பின்னர் எஸ்பி சரவணன் செய்தியாளர்களிடம்  கூறியதாவது: சிதம்பரம் நகர போக்குவரத்து காவல் நிலையத்துக்கு ஆய்வாளர், 2 உதவி ஆய்வாளர்கள், 20 காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். கடலூர் மாவட்டத்தில் முக்கிய இடங்களில் போக்குவரத்து சிக்னல் கருவிகள் பொருத்தப்பட உள்ளன. மேலும் குற்றங்களை உடனுக்குடன் கண்டறிய அனைத்துப் பகுதிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன. குறிப்பாக நகரம், குடியிருப்புப் பகுதிகளில் அங்குள்ள நகர நலச் சங்கம் உதவியுடன் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வலியுறுத்தப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலைப் பகுதிகளில் கிராமங்கள் உள்ள இடத்தில் எல்இடி மின்ஒளிர் விளக்குகள் பொருத்தப்படும். சிதம்பரம் நகர வீதிகளில் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்படும் ஆட்டோக்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எஸ்பி தெரிவித்தார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai