சுடச்சுட

  

  பொங்கல் பரிசுத் தொகுப்பைப் பெற மக்கள் ஆர்வம் காட்டிவரும் நிலையில், விநியோகப் பணிகள் இரவு வரை நீடித்தன.
  பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.ஆயிரம் ரொக்கம், தலா ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, தலா 20 கிராம் முந்திரி, உலர்ந்த திராட்சை, 5 கிராம் ஏலக்காய், 2 அடி நீள கரும்புத் துண்டு ஆகியவை பொங்கல் பரிசாக வழங்கிட தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி உத்தரவிட்டார். 
  இதனைத் தொடர்ந்து, கடலூர் மாவட்டத்தில் 7,09,400 குடும்ப அட்டைதாரர்கள், 426 இலங்கைத் தமிழர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணிகள் புதன்கிழமை தீவிரமாக நடைபெற்றது. மாவட்டம் முழுவதும் உள்ள 1,420 நியாயவிலைக் கடைகளிலும் பொங்கல் பரிசு வழங்கும் பணி நடைபெற்ற நிலையில், பரிசுத் தொகை விநியோகம் தொடர்பாக நீதிமன்றம் தடை விதித்திருப்பதாக தகவல் பரவியது. 
  இதனால், பொதுமக்கள் ரூ.1,000 பணத்துடன் பொங்கல் பரிசுத் தொகுப்பைப் பெற பிற்பகலுக்குப் பின்னர் நியாய விலைக் கடைகளில் அதிகளவில் குவிந்தனர். இதனால், கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த முடியாமல் நியாயவிலைக் கடை பணியாளர்கள் திணறியதோடு, வரிசையில் காத்திருந்தவர்களுக்கு டோக்கன் வழங்கினர். 
  அதன்பிறகு பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பரிசுத் தொகுப்பை பெற்றுச் சென்றனர்.
  கிராமப் பகுதிகளில் பரிசுத் தொகுப்பு விநியோகம் இரவு 10 மணியையும் கடந்து நீடித்தது. தங்களுக்கான பொருள்களை வழங்கினால் மட்டுமே விடுவிக்க முடியுமென பொதுமக்கள் தெரிவித்ததால் வேறுவழியின்றி கடை ஊழியர்கள் பொருள்களை தொடர்ந்து வழங்கினர்.  கொட்டும் பனியையும் பொருள்படுத்தாமல் பொதுமக்கள் பரிசுத் தொகுப்பை வாங்கிச் சென்றனர்.  இதுகுறித்து, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்ததாவது: கடலூர் மாவட்டத்தில் அரிசி அட்டைக்கான குடும்ப அட்டைகள் 6,01,815, சர்க்கரை அட்டைகள் 17,594, அந்த்யோதயா அட்டைகள் 84,950, காவலர் குடும்ப அட்டை 1,573, எந்தப் பொருளும் வாங்காத கெளரவ அட்டைகள் 620 உள்பட 7,09,400 குடும்ப அட்டைகள் பயன்பாட்டில் உள்ளன. 
  தற்போது, சர்க்கரை மட்டுமே வாங்கும் குடும்ப அட்டைகள், கெளரவ அட்டைதாரர்களுக்கு மட்டுமே ரூ.ஆயிரம் வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது.  மற்ற அட்டைதாரர்களுக்கு வழக்கம்போல பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுகிறது என்றனர். 
  இரண்டாவது நாளாக வியாழக்கிழமையும் நீண்ட வரிசையில் திரளானோர் காத்திருந்து பரிசுத் தொகுப்பை பெற்றுச் சென்றனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai