போலி ஆவணம் தயாரித்து மோசடி: அஞ்சல் அலுவலருக்கு 3 ஆண்டு சிறை

போலி ஆவணம் தயாரித்து பண மோசடி செய்தது தொடர்பாக அஞ்சல் அலுவலருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கடலூர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 

போலி ஆவணம் தயாரித்து பண மோசடி செய்தது தொடர்பாக அஞ்சல் அலுவலருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கடலூர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 
 கடலூர் வில்வராயநத்தத்தில் துணை அஞ்சல் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு 2005 முதல் 2017-ஆம் ஆண்டு வரை துணை அஞ்சலக அலுவலராகப் பணியாற்றியவர் அதே பகுதியைச் சேர்ந்த ஆரோக்கியராஜ் (57). தற்போது, சிதம்பரம் கிழக்கு அஞ்சலகத்தில் உதவி அஞ்சலக அதிகாரியாகப் பணியில் உள்ளார். 
 இவர், வில்வராயநத்தம் துணை அஞ்சல் அலுவலகத்தில் பணியிலிருந்தபோது போலியாக கையெழுத்திட்டும், போலி ஆவணங்கள் தயாரித்தும் அஞ்சலக சேமிப்புக் கணக்குகளில் முறைகேடு செய்தது  தணிக்கையில் தெரியவந்தது. குறிப்பாக, கிரிஜா என்பவரது கணக்கிலிருந்து ரூ.13,100, அஞ்சனவள்ளி என்பவரது சேமிப்புக் கணக்கிலிருந்து ரூ.5,400 , ஜெயலட்சுமி என்பவரது வைப்புத் தொகை கணக்கிலிருந்து ரூ.4,000 கையாடல் செய்தது  கண்டறியப்பட்டது. 
 இதுதொடர்பாக, உதவி அஞ்சல் கண்காணிப்பாளர் அப்துல் லத்தீப் அளித்த புகாரின்பேரில் கடலூர் மாவட்ட குற்றப் பிரிவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை கடலூர் குற்றவியல் நீதித் துறை நடுவர் எண்-2  நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கில் நீதிபதி அன்வர் சதாத் புதன்கிழமை தீர்ப்பளித்தார். அதில், அரசு இயந்திரத்தை தவறாகப் பயன்படுத்தி ஏமாற்றியதற்காக 3 ஆண்டுகளும், மோசடி குற்றத்துக்காக 3 ஆண்டுகளும், போலி ஆவணங்கள் தயாரித்ததற்கு 3 ஆண்டுகளும், அவற்றை உண்மையான ஆவணம் போல காண்பித்து ஏமாற்றியதற்கு 2 ஆண்டுகளும் என மொத்தம் 11 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி  
ரூ.9 ஆயிரம் அபராதமும் விதித்தார். இந்த தண்டனைகளை 
ஏக காலத்தில் அனுபவிக்க நீதிபதி உத்தரவிட்டார். ஆரோக்கியராஜ் 7 மாதங்களில் ஓய்வு பெற உள்ள நிலையில் சிறைத் தண்டனை 
பெற்றது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com