சுடச்சுட

    கடலூர் மாவட்டத்தில் பல்வேறு கல்வி நிலையங்களில் சமத்துவ பொங்கல் விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது. 
  தமிழர் திருநாளாம் பொங்கல் விழாவை முன்னிட்டு கடலூர் தேவனாம்பட்டினம் அரசுப் பெரியார் கலைக் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. கல்லூரி முதல்வர் பா.ரா.ராஜகுமார் தலைமையில், துணை முதல்வர் ப.குமரன் முன்னிலையில் இந்த விழா நடைபெற்றது. கல்லூரியில் உள்ள 17 துறைகளிலும், அந்தந்த துறைகளின் முன் இளநிலை, முதுநிலை மாணவ, மாணவிகள் பொங்கலிட்டு சூரியனுக்கு படைத்தனர். முன்னதாக, அவர்கள் தமிழர் பாரம்பரிய உடைகளை அணிந்தபடி, தங்களது துறைகளை வண்ணக் கோலங்களால் அலங்கரித்தனர். தொடர்ந்து, மண் பானையில் சமத்துவ பொங்கல் வைத்தும், கரும்பு, வாழைப் பழம் உள்ளிட்டவைகளை இயற்கைக்கு படைத்தும் வழிபாடு நடத்தினர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விலங்கியல் துறைத் தலைவர் ஆர்.கண்ணன் மற்றும் துறைத் தலைவர்கள் செய்திருந்தனர்.
  விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே கார்கூடல் அரசு நடுநிலைப் பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. விழாவில், மாணவர்கள், கிராம மக்கள் இணைந்து ஏர்கலப்பை உள்ளிட்டவற்றை ஊர்வலமாக கொண்டு வந்தனர். தொடர்ந்து கலை நிகழ்ச்சிகளுடன் விழா நடைபெற்றது. 
  விருத்தாசலம் கோபாலபுரத்திலுள்ள ஜெயப்பிரியா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பொங்கல் விழா பள்ளித் தாளாளர் சி.ஆர்.ஜெயசங்கர் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பள்ளி முதல்வர் ஏ.முருகன் முன்னிலை வகித்தார். துணை முதல்வர் ராஜகயல்விழி, நிர்வாக அலுவலர் ராமன்குமாரமங்கலம், ஒருங்கிணைப்பாளர்கள் சுமதி, அஜிதா ஆகியோர் பொங்கல் விழா குறித்து உரையாற்றினர். ஆசிரியர் பாரதிதாசன் முன்னுரையுடன் விழா தொடங்கி, மாணவ, மாணவிகளுக்கு சக்கரைப் பொங்கல் வழங்கப்பட்டது. மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. 
  சிதம்பரம்: சிதம்பரம் மானாசந்து நகராட்சி நடுநிலைப் பள்ளியில் சமத்துவப் பொங்கல் விழா நடைபெற்றது. விழாவுக்கு, நகராட்சி ஆணையர் சுரேந்திரஷா தலைமை வகித்தார். தலைமை ஆசிரியை ஜெயக்கொடி வரவேற்றார். சிதம்பரம் தொகுதி எம்எல்ஏ கே.ஏ.பாண்டியன் விழாவை தொடக்கி வைத்து, இரண்டாம் பருவத் தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கிப் பேசினார். 
  வட்டாரக் கல்வி அலுவலர் ஜெயக்குமார் ஜான்சன், கல்விக் குழுத் தலைவர் டேங்க் ஆர்.சண்முகம் ஆகியோர் மாணவர்களுக்கு இனிப்பு வழங்கினர். விழாவில் நகர்மன்ற முன்னாள் தலைவர் எம்.எஸ்.என்.குமார், முன்னாள் துணைத் தலைவர் ஆர்.செந்தில்குமார், பள்ளி ஆசிரியர்கள் ரமா, சந்திரபிரபா, அனுராதா, இலக்கியா, விஷ்ணுபிரியா உள்ளிட்டோர் பங்கேற்றனர். 
  சிதம்பரம் அருகே பூ.மடுவங்கரை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில், தலைமை ஆசிரியை ஈஸ்வரி வரவேற்றார். விழாவில் கிராம கல்விக் குழு உறுப்பினர்கள், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள், பள்ளி மற்றும் அங்கன்வாடி ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர். பகுதிநேர ஆசிரியர்கள் பிரசன்ன நந்தா, மணிமொழி ஆகியோர் ஏற்பாடுகளை செய்தனர்.
  குறிஞ்சிப்பாடி: குறிஞ்சிப்பாடி திருவள்ளுவர் கலை, அறிவியல் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. கல்லூரியின் அனைத்துத் துறைகள் சார்பில் மாணவ, மாணவிகள் பொங்கலிட்டனர். தொடர்ந்து, சிலம்பாட்டம், கரகாட்டம், ஒயிலாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளை நடத்தினர். விழாவுக்கு கல்லூரி முதல்வர் வ.ராம்நாத் தலைமை வகித்தார். நிர்வாகக் குழுத் தலைவர் ஆர்.சட்டநாதன், பொருளாளர் டி.ராமலிங்கம், ஆலோசகர் ஏ.ஆசைத்தம்பி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக குறிஞ்சிப்பாடி காவல் நிலைய உதவி ஆய்வாளர் பிரசன்னா பங்கேற்று, கபடி, கூடைப்பந்து போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கிப் பேசினார். துணை முதல்வர் பி.மணிவண்ணன் நன்றி கூறினார்.
  கல்வியியல் கல்லூரியில் நடைபெற்ற விழாவுக்கு கல்லூரி முதல்வர் எஸ்.சிங்காரவேலு தலைமை வகித்தார். துணை முதல்வர் ஆர்.மலர்ஒளி உள்ளிட்டோர் பங்கேற்றனர். 
  பண்ருட்டி: பண்ருட்டி ஜான்டூயி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி சமத்துவ பொங்கல் விழா, மேலப்பாளையத்தில் உள்ள நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. பள்ளித் தாளாளர் எம்.வீரதாஸ் தலைமை வகித்தார். முதல்வர் வாலண்டினா லெஸ்லி முன்னிலை வகித்தார். தலைமையாசிரியர் மணிகண்டன் உள்ளிட்ட ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர். 
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai