சுடச்சுட

  

  நெகிழிப் பொருள்கள் மீதான தடையை அமல்படுத்துவதில் 
  தீவிரம் காட்டப்பட வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தினர்.
  ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்பட்டு வீசப்படும் 14 வகையான நெகிழிப் (பிளாஸ்டிக்) பொருள்களுக்கு  தமிழகத்தில் தடை விதித்து முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இந்த தடை உத்தரவு கடந்த 
  1-ஆம் தேதி முதல் அமலுக்கு வந்த பின்னர் பொதுமக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. அன்றாடத் தேவைக்கான பொருள்களை வாங்கச் செல்லும்போது பொதுமக்கள் துணிப்பை, பாத்திரம் போன்றவற்றை எடுத்துச் சென்று வருகின்றனர். தடை அமலுக்கு வந்ததை அடுத்து சில நாள்களுக்கு மட்டுமே 
  பல்வேறு துறையினரும் கடைகளில் ஆய்வு நடத்தினர். 
  ஆனால், ஒரு வாரத்துக்குப் பின்னர் இந்த ஆய்வுகள் நிறுத்திக்கொள்ளப்பட்டதால், நெகிழிகள் மீண்டும் பயன்பாட்டுக்கு வரத் தொடங்கியுள்ளன.
  இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: நெகிழியை, தடைக் காலத்துக்கு முன்னரே வியாபாரிகள் வாங்கி இருப்பு வைத்துள்ளனர். அந்தப் பைகளை தற்போது புழக்கத்தில் விட்டு வருகின்றனர். அரசுத் துறை அலுவலர்களின் கண்காணிப்பு குறைந்துள்ளதால் வியாபாரிகளில் சிலர் தங்களிடமுள்ள இருப்பு 
  நெகிழிப் பைகளை வழங்கி வருகிறார்கள். குறிப்பாக, சிறிய கடைகள், இரவு நேர உணவகங்களில் நெகிழிப் பயன்பாட்டை மீண்டும் அதிகமாகக் காண முடிகிறது. 
  குறிப்பாக அனைத்துக் கோயில்களிலும் நெகிழிப் பொருள்கள் தாராளமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. கோயில்களின் முன் அமைக்கப்பட்டுள்ள பூக் கடைகள், பிரசாதக் கடைகளில் நெகிழிப் பையிலேயே பொருள்கள் வழங்கப்படுகின்றன. எனவே, கோயில்களில் நெகிழிக்கான தடையை கடுமையாக அமல்படுத்த வேண்டும்.
  நெகிழித் தடை தொடர்பாக அரசு அலுவலர்கள் காலை முதல் மாலை வரை மட்டுமே சோதனைகளில் ஈடுபடுகிறார்கள். ஆனால், இரவு நேரக் கடைகள், தள்ளுவண்டிக் கடைகளில் நெகிழிப் பயன்பாடு அதிகமாக உள்ளது. ஜவுளிக் கடைகளில் ஏற்கெனவே அச்சடித்து வைத்திருந்த நெகிழிப் பைகளையும் தற்போது வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகின்றனர். பொருள்களின் தன்மை மாறாமலிருக்க பொட்டலமிட்டு பயன்படுத்துவதற்காக விலக்கு அளிக்கப்பட்ட சில வகை நெகிழிகளை போல, ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்படும் நெகிழி சில கடைகளில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. 
  சிலர் தங்களது சுய லாபத்துக்காக நெகிழிப் பயன்பாட்டை மீண்டும் கொண்டுவர முயற்சிக்கின்றனர். எனவே, மாவட்ட நிர்வாகம் நெகிழிக்கான தடையை அமல்படுத்துவதில் தீவிரம் காட்டுவதோடு பகல், இரவு நேரங்களில் உள்ளாட்சி, உணவு பாதுகாப்புத் துறை, வருவாய்த் துறை, காவல் துறையினருடன் இணைந்து மிகப் பெரிய அளவில் சோதனைகளை நடத்த வேண்டும். 
  நெகிழித் தடை குறித்து போதிய விழிப்புணர்வையும் ஏற்படுத்த வேண்டும் என தெரிவித்தனர்.
  இதுகுறித்து அரசு அலுவலர்கள் சிலர் கூறுகையில், ஒவ்வொரு துறையிலும் ஆள்கள் பற்றாக்குறை உள்ள நிலையில் இரவு நேர சோதனை என்பது சாத்தியமில்லை என்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai