சுடச்சுட

  

  கடலூர் மாவட்டத்திலிருந்து பல்வேறு பகுதிகளுக்கும் 12 புதிய பேருந்துகளின் சேவையை அமைச்சர் எம்.சி.சம்பத் கடலூரில் ஞாயிற்றுக்கிழமை தொடக்கி வைத்தார்.
  தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் 555 புதிய பேருந்துகளின் சேவையை தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி கடந்த 7-ஆம் தேதி தொடக்கி வைத்தார். இதில், விழுப்புரம் கோட்டத்துக்குள்பட்ட கடலூர் மாவட்டத்துக்கு 12 புதிய பேருந்துகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.  
  இந்தப் பேருந்துகளின் இயக்கத்தை  தொடக்கி வைக்கும் நிகழ்ச்சி கடலூர் பேருந்து நிலையத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ரா.ராஜகிருபாகரன் முன்னிலையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில், 
  தமிழக தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் கொடியசைத்து பேருந்து சேவையை தொடக்கி வைத்தார்.
  இதில், தடம் எண்-283 கடலூரிலிருந்து பண்ருட்டி, உளுந்தூர்பேட்டை வழியாக சேலத்துக்கு 4 பேருந்துகளும், தடம் எண்-192 கடலூரிலிருந்து வடலூர், விருத்தாச்சலம் வழியாக சேலத்துக்கு 2 பேருந்துகளும், தடம் எண்-188 கடலூரிலிருந்து புதுச்சேரி, கிழக்கு கடற்கரைச் சாலை வழியாக சென்னைக்கு ஒரு பேருந்தும், தடம் எண்-196 சிதம்பரத்திலிருந்து வடலூர், விருத்தாச்சலம் வழியாக சேலத்துக்கு ஒரு பேருந்தும், தடம் எண்-157 சிதம்பரத்திலிருந்து கடலூர், புதுச்சேரி, திண்டிவனம் வழியாக சென்னைக்கு 4 பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.
  நிகழ்ச்சியில் கடலூர் மண்டல போக்குவரத்துக் கழக பொது மேலாளர் ஜெ.சுந்தரம், துணை மேலாளர் கே.சேகர்ராஜ், உதவி மேலாளர்கள் முருகானந்தம், கே.சுந்தரம், கி.தியாகராஜன், ஆர்.பன்னீர்செல்வம், கடலூர் நகர்மன்ற முன்னாள் தலைவர் ஆர்.குமரன்,  முன்னாள் துணைத் தலைவர் ஜெ.குமார், அதிமுக தொழிற்சங்க மாவட்ட செயலர் கே.ஆர்.பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai