பொங்கல் பண்டிகை: பூக்கள், காய்கறி விலை உயர்வு

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பூக்கள், காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளது. 

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பூக்கள், காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளது. 
தமிழர் திருநாளாம் தைப் பொங்கல் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்படுகிறது. இத்த பண்டிகையில் புதிய மண் பானையில் பொங்கலிட்டு சூரியனுக்கு படைப்பது முக்கிய அம்சமாகும்.  மேலும், புதுமணத் தம்பதியருக்கு சீர்வரிசைப் பொருள்கள் வழங்கப்பட்டு அதில் பொங்கலிடுவதும்  நடைமுறையாகும்.
இதனால், பொங்கலுக்குத் தேவையான மளிகைப் பொருள்கள், 
காய்கறிகள், பாத்திரங்கள், பூக்கள், பழங்கள் வாங்குவதற்காக பொதுமக்கள் சந்தைகளில் குவிந்து வருகின்றனர். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் காலை முதலே சந்தைகளில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. மாலையில் மேலும் அதிகமான கூட்டத்தைக் காண முடிந்தது.
பொங்கல் பண்டிகையில் முக்கிய இடம் பெறும் கரும்பு ஜோடி ரூ.30 முதல் ரூ.60 வரையிலும், 20 கரும்புகள் கொண்ட கட்டு ரூ.300 முதல் ரூ.450 வரையிலும் கடலூர் உழவர் சந்தையில் விற்பனையானது. அதேபோல மஞ்சள் கொத்து தரத்துக்கேற்ப ரூ.10 முதல் ரூ.30 வரையிலும், இஞ்சிக்கொத்து ரூ.20 முதலும் விற்பனை செய்யப்பட்டது. பூவன் பழம் தார் ரூ.400 முதல் ரூ.600 வரையிலும், ஒரு சீப் பழம் ரூ.50-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
பூக்களில் சாமந்தி கிலோ ரூ.160, ரோஜா ரூ.200, காட்டுமல்லி, அரும்பு தலா ரூ.700 வரை விற்பனையானது. கடந்த வாரங்களில் சாமந்தி ரூ.120 முதலும், காட்டுமல்லி ரூ.400 வரையிலும் விற்பனையானதாக பூ வியாபாரி டி.சீனுவாசன் கூறினார். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தற்போது விலை ஏற்றம் உள்ளதாகவும், அரும்பு, குண்டுமல்லி ஆகியவற்றின் அறுவடைக்காலம் முடிவடைவதால் அதன் விலை அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
கத்திரி, வெண்டை, வெங்காயம் உள்ளிட்ட நாட்டுக் காய்களின் விலை 25 சதவீதம் வரை அதிகரித்துள்ளதாகவும், தக்காளி 
ரூ.12-லிருந்து ரூ.30-க்கு விற்பனையாவதாகவும் கடலூர் உழவர் சந்தை வட்டாரங்கள் தெரிவித்தன. அதே நேரத்தில் மலை காய்கறிகளின் விலையில் மாற்றம் இல்லை. 
கடலூர் உழவர் சந்தையில் வழக்கமாக, 20 டன் காய்கறிகள், பழங்கள் விற்பனையாகும் நிலையில் ஞாயிற்றுக்கிழமை 30 டன் 
காய்கறி, பழங்கள் விற்பனையானதாக தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com