சுடச்சுட

  

  கடலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் சமத்துவ பொங்கல் விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.
   கடலூர் அனைத்து குடியிருப்போர் நலச் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கடலூர் அழகப்பா நகரில் மக்கள் ஒற்றுமை பொங்கல் விழா நடைபெற்றது. விழாவுக்கு கூட்டமைப்புத் தலைவர் பி.வெங்கடேசன் தலைமை வகித்தார். இணைப் பொது செயலர் டி.புருஷோத்தமன், பொருளாளர் கே.பி.சுகுமாரன், அழகப்பா நகர் தலைவர் கண்ணன், பல்வேறு நகர நிர்வாகிகள் வீராசாமி, திருநாவுக்கரசு, வரதராஜன், சுந்தரமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். அழகப்பா நகர் செயலர் நடராஜன் வரவேற்றார்.
   கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் எம்.மருதவாணன் தொடக்க உரை ஆற்றினார். பொங்கல் விழாவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ப.சரவணன் தொடக்கி வைத்தார்.
   விழாவில் மூத்த தடகள வீரர் பரமசிவம், தேசிய அளவிலான கால்பந்து பெண்கள் அணி வீராங்கனைகள் மகாலட்சுமி, ராதிகா, அம்சவல்லி, சிவசங்கரி, பயிற்சியாளர் மாரியப்பன் மற்றும் 10-ஆம் வகுப்பு, பிளஸ்2 தேர்வுகளில் சிறப்பிடம் பெற்றவர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பரிசு வழங்கி பாராட்டினார்.
   மாவட்ட வழங்கல் அலுவலர் வி.வெற்றிவேல், வட்டார வளர்ச்சி அலுவலர் சீனிவாசன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். விழாவில் பல்வேறு நகர்களைச் சேர்ந்த மகளிர் 100 பேர் இணைந்து "மக்கள் ஒற்றுமை' பொங்கலிட்டனர்.
   கடலூர் மத்திய சிறை: கடலூர் மத்திய சிறையில் சிறைத் துறை கண்காணிப்பாளர் நிகிலா நாகேந்திரன் தலைமையில் பணியாளர்கள் ஞாயிற்றுக்கிழமை பொங்கல் விழா கொண்டாடினர். சிறை அலுவலர் கோ.காந்தி, துணை சிறை அலுவலர் ஜெ.சடகோபன், நல அலுவலர் கே.ஆர்.சாந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
   பொங்கல் விழாவை முன்னிட்டு சிறைக் காவலர் குடியிருப்பு வளாகத்தில் உள்ள மைதானத்தில், சிறைப் பணியாளர்களுக்கு பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன.
   மேலும், அவர்களது குடும்பத்தினருக்கும் கோலமிடுதல், கபடி, கையுந்துப்பந்து, சிலம்பம், ஓட்டம், நீளம் தாண்டுதல், உரி அடித்தல், இசை நாற்காலி, சாக்குப் போட்டி, வேகநடை மற்றும் சிறுவர்களுக்கான விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சிறைக் கண்காணிப்பாளர் பரிசுகளை வழங்கிப் பேசினார்.
   பண்ருட்டி: பண்ருட்டியில் மன வளர்ச்சி குன்றியோருக்கான தீப ஒளி சிறப்புப் பயிற்சிப் பள்ளியில் பொங்கல் விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது. அண்ணாகிராமம் ஒன்றிய மதிமுக சார்பில் நடைபெற்ற இந்த விழாவுக்கு, ஒன்றியச் செயலர் எஸ்.கே.வெங்கடேசன் தலைமை வகித்து சிறப்பு குழந்தைகளுக்கு பொங்கல் பரிசுகளை வழங்கினார்.
   பள்ளித் தாளாளர் அருள்மணி முன்னிலை வகித்தார். தென்னிந்திய கைவினை முன்னேற்றக் கழக மாவட்டச் செயலர் எஸ்.கே.சரவணன், மின்வாரிய செயற்பொறியாளர் டி.செüந்தர்ராஜன், மாவட்ட பிரதிநிதி பன்னீர்செல்வம், திருநாவுக்கரசு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். பள்ளி அலுவலக உதவியாளர் எம்.நந்தினி நன்றி கூறினார்.
   பண்ருட்டி ரத்னா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. பள்ளி நிறுவனர் சி.மாயகிருஷ்ணன் குத்துவிளக்கேற்றி விழாவை தொடக்கி வைத்தார். தாளாளர் எம்.ராமகிருஷ்ணன், பள்ளி முதல்வர் எம்.ரவி ஆகியோர் முன்னிலை வகித்து சிறப்புரையாற்றினர்.
   மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசு வழங்கப்பட்டது. மாணவர்களின் கலை நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் இடம்பெற்ற, இயற்கை விவசாயம் குறித்த விழிப்புணர்வு நாடகம் அனைவரையும் கவர்ந்தது.
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai