சுடச்சுட

  

  கண்காணிப்பு கேமரா பதிவு மூலம் இரு வழக்குகளில் துப்பு துலங்கியது

  By DIN  |   Published on : 17th January 2019 07:03 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கடலூர் மாவட்டத்தில் ஒரே நாளில் கண்காணிப்பு கேமரா பதிவு மூலம் இரண்டு குற்ற வழக்குகள் துப்பு துலக்கப்பட்டது.
  கடலூர், பச்சயாங்குப்பம், வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் வசிப்பவர் விஜயலட்சுமி(67). இவர் வீட்டில் தனியாக இருந்த போது வீடு வாடகைக்கு கேட்பது போல வந்த மூன்று பேர், விஜயலட்சுமி அணிந்திருந்த இரண்டரை பவுன் நகையை பறித்துச் சென்றனர். 
  கடலூர், முதுநகர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து புலன் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், குற்றவாளியை கண்டுபிடிக்கும் நோக்கில் சம்பவ இடத்தில் தனியார் நிறுவனத்தின் கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது எதிரிகள் அடையாளம் காணப்பட்டது. இதையடுத்து, அந்த வழக்கில் சம்பந்தப்பட்ட பச்சையாங்குப்பம், முத்தாலம்மன் கோவில் தெரு, கிருஷ்ணராஜ் மகன் சதீஷ்குமார்(30), வடலூர், ஆபத்தாரபுரம், குப்புசாமி தெரு, கதிர்வேல் மகன் சந்தோஷ்குமார்(21), திருவள்ளூர் மாவட்டம், பாப்பன்சத்திரம், ராமானுஜம் மகன் ரஞ்சித் என்கிற சத்தியமூர்த்தி(31) ஆகிய மூன்று பேரை கைது செய்து, நகைகளை பறிமுதல் செய்தனர்.
  இதேபோல, சென்னையைச் சேர்ந்தவர் பொறியாளர்அகிலன்(42). இவர், தனது மனைவி சிவகாமசுந்தரி, மகன்கள் சீனிவாசன், சிவபிரகாஷ் ஆகியோருடன் ராமநத்தம் பேருந்து நிலையத்தில் செவ்வாய்க்கிழமை அதிகாலை 5 மணிக்கு  வந்திறங்கினர். 
  பின்னர், திட்டக்குடியில் உள்ள வீட்டுக்குச் சென்று பார்த்தபோது சிவகாமசுந்தரி கொண்டு வந்த பையை காணவில்லையாம். அதில், 10 பவுன் தங்க நகைகள் மற்றும் 2 செல்லிடப்பேசிகள் இருந்தனவாம்.
  இதுகுறித்து ராமநத்தம் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். ஆய்வாளர் சுதாகர் ராமநத்தம் பேருந்து நிறுத்தத்தில் இருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்ததில் ஆட்டோ ஓட்டுநர் பைகளை எடுத்து வைப்பது தெரிய  வந்தது.  இதையடுத்து அந்த ஆட்டோ ஓட்டுநரான தொழுதூர் சங்கர் என்பவரிடம் விசாரணை நடத்தியதில், தூக்கக் கலக்கத்தில் வீட்டிற்கு வந்துவிட்டதாகவும், தானே காவல் நிலையத்தில் கொண்டு வந்து ஒப்படைக்க இருந்ததாகவும் கூறியதால், அவரிடம் இருந்த பையை மீட்டு ஒப்படைத்தனர்.
  இந்த இரண்டு சம்பவங்களிலும் கடலூர் முதுநகர் மற்றும் ராமநத்தம் காவல்துறையினர் கண்காணிப்பு கேமரா மூலம் விசாரணை மேற்கொண்டு சிறப்பாக பணியாற்றிய காவல்துறை அதிகாரிகளை, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ப.சரவணன் பாராட்டினார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai