என்எல்சி 3-ஆவது சுரங்கத்துக்காக விளை நிலங்களை கையகப்படுத்தக் கூடாது: மார்க்சிஸ்ட் கம்யூ. வலியுறுத்தல்

என்எல்சி இந்தியா நிறுவனம் 3-ஆவது சுரங்கம் அமைக்க விவசாய நிலங்களைக் கையகப்படுத்தும் திட்டத்தை கைவிட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியது. 

என்எல்சி இந்தியா நிறுவனம் 3-ஆவது சுரங்கம் அமைக்க விவசாய நிலங்களைக் கையகப்படுத்தும் திட்டத்தை கைவிட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியது. 
 அந்தக் கட்சியின் மாவட்டக் குழுக் கூட்டம் கடலூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு செயற்குழு உறுப்பினர் பி.கருப்பையன் தலைமை வகித்தார். மத்தியக் குழு உறுப்பினர் உ.வாசுகி, மாவட்டச் செயலர் டி.ஆறுமுகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: என்எல்சி நிர்வாகம் 3-ஆவது சுரங்க திட்டப் பணிக்கு 13,500 ஏக்கர் விளை நிலங்களை  கையகப்படுத்த திட்டமிட்டு அதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. நிலம் கையகப்படுத்த திட்டமிட்டுள்ள 40-க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள நிலங்கள் நெல், கரும்பு, வாழை, மணிலா, எள், பூக்கள், காய்கள் என அனைத்துப் பயிர்களும் விளையும் இருபோக, முப்போக சாகுபடி நிலங்களாகும். இந்த நிலங்கள் கையகப்படுத்தப்பட்டால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்.  இவர்களை நம்பியுள்ள விவசாய தொழிலாளர்களின் வாழ்நிலை கேள்விக்குறியாகும்.
 கிராம மக்கள் என்எல்சி 3-ஆவது சுரங்க திட்ட பணிக்கு நிலம் கொடுக்க முடியாது என உறுதியாக உள்ளனர். இதுதொடர்பாக பலகட்ட போராட்டங்களையும் நடத்தி வருகிறார்கள். எனவே, மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, விளை நிலங்களை கட்டாயப்படுத்தி கையகப்படுத்துவதை என்எல்சி  நிர்வாகம் நிறுத்த வேண்டும். 
 கடலூர் மாவட்டம் பெட்ரோ கெமிக்கல் மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.  ஹைட்ரோ-கார்பன் திட்டத்தையும் அமலாக்க மத்திய அரசு முயற்சித்து வருகிறது.  இந்தப் பிரச்னைகளில் மத்திய, மாநில அரசுகள் தலையிட்டு தீர்வு காண வேண்டுமென கூட்டத்தில் தீர்மானங்களை நிறைவேற்றினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com