சிதம்பரம் நகரில் தொடரும் போக்குவரத்து நெரிசல்!

சிதம்பரம் நகரில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருவதால், பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.

சிதம்பரம் நகரில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருவதால், பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.
உலகப் பிரசித்தி பெற்ற நடராஜர் கோயில் அமைந்துள்ள சிதம்பரம் நகரம், 4 வீதிகளைச் சுற்றி  கட்டமைக்கப்பட்டுள்ளது. சிறப்பு வாய்ந்த இந்த நகரில் போக்குவரத்து நெருக்கடி தொடர்கதையாகி வருகிறது. நகரின் 4 வீதிகளிலும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு நடைபாதை அமைக்கப்பட்டது. 
ஆனால், வீதிகளில் கடை வைத்திருப்போர், சாலையோர வியாபாரிகளால் நடைபாதை முழுவதும் ஆக்கிரமிக்கப்படுவதாக பொதுமக்கள் கூறுகின்றனர். இதனால் பாதசாரிகள் நடைபாதையை தவிர்த்து, வாகன நெரிசலுக்கு இடையே சாலையில் நடக்கும் நிலை ஏற்படுகிறது. 
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: சிதம்பரம் நகரில் 4 வீதிகளிலும் சாலையோரம் 50-க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் நிறுத்தப்படுகின்றன. சிதம்பரம் ஏ.எஸ்.பி.யாக செந்தில்வேலன் பணியாற்றியபோது 4 வீதிகளில் 4 ஆட்டோ நிறுத்தங்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டது. ஆட்டோ நிறுத்தத்தில் 5 ஆட்டோக்களுக்கு மேல் நிறுத்தக்கூடாது என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டது. 
ஆனால், தற்போது ஒவ்வோர் ஆட்டோ நிறுத்தத்திலும் 10 ஆட்டோக்கள் வரை நிறுத்தப்படுகின்றன. இதனால், கடை வீதிகளில் பொருள்கள் வாங்க வரும் பொதுமக்கள் தங்களது இருசக்கர வாகனத்தை நிறுத்த இடமில்லாமல் பரிதவிக்கின்றனர். நடைபாதையிலும், சாலையோரத்திலும் பூக்கடைகள், பழக்கடைகள், தரைக் கடைகள் அமைத்து வியாபாரிகள் ஆக்கிரமித்துள்ளனர். 
இதனால் பாதசாரிகள் சாலையில் நடப்பதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. இதுதவிர சிறிய ரக சரக்கு வாகனங்களை சாலையோரம் நிறுத்தி பழம், காய்கறி வியாபாரம் செய்கின்றனர். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மேலரத வீதியில் தனியார் நிறுவனம் முன்பாக நடைபாதையில் கலை நிகழ்ச்சி நடத்த நகர காவல் துறை அனுமதி வழங்கியது. இதை பார்க்க மக்கள் குவிந்ததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 
எனவே, சிதம்பரம் நகரில் போக்குவரத்து நெருக்கடி பிரச்னையை தீர்க்க மாவட்ட  எஸ்பி நடவடிக்கை எடுக்க வேண்டும். பயன்படாத நடைபாதையை அகற்றினால் சாலை மேலும் விரிவடையும். இதுகுறித்து சிதம்பரம் நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com