வடலூர் தரும சாலையில் உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு

வடலூர் வள்ளலார் தெய்வ நிலைய தரும சாலையில் உள்ள அன்னதான மையத்தை உணவுப் பாதுகாப்பு, மருந்து நிர்வாகத் துறையினர் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தனர். 

வடலூர் வள்ளலார் தெய்வ நிலைய தரும சாலையில் உள்ள அன்னதான மையத்தை உணவுப் பாதுகாப்பு, மருந்து நிர்வாகத் துறையினர் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தனர். 
வள்ளலார் தெய்வ நிலையத்தில் ஆண்டுதோறும் தைப்பூசத் திருவிழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி நிகழாண்டு 148-ஆவது தைப்பூச ஜோதி தரிசனப் பெருவிழா வருகிற 21-ஆம் தேதி நடைபெற உள்ளது. 
இந்த நிலையில், உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறையினர் வடலூர் வள்ளலார் தெய்வ நிலையத்தில் உள்ள அன்னதான மையத்தை வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தனர். மாவட்ட நியமன அலுவலர் தஷ்ணாமூர்த்தி, உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் நல்லதம்பி, சுப்பிரமணியன், ரவிச்சந்திரன், சரவணகுமார், கொளஞ்சி, சுந்தரமூர்த்தி ஆகியோர் உணவு பரிமாறும் இடம், சமையல் கூடங்களை ஆய்வு செய்தனர்.
அப்போது, சமையலுக்கு அயோடின் கலந்த உப்பை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டது. 
அதேபோல, அன்னதானம் செய்பவர்கள் நெகிழியை பயன்படுத்தக் கூடாது; வாழை இலை, பாக்கு மட்டையை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும், அன்னதானத்துக்கு என ஒதுக்கப்பட்ட இடங்களில் மட்டுமே அன்னதானம் வழங்க வேண்டும் என்றும் உணவுப் பாதுகாப்புத் துறையினர் அறிவுறுத்தினர்.
தானிய உண்டியல் திறப்பு: தைப்பூச பெருவிழாவை முன்னிட்டு, வடலூர் வள்ளலார் தெய்வ நிலையத்துக்கு சன்மார்க்க அன்பர்கள், பொதுமக்கள் பொருள்களையும், அரிசி, பருப்பு ஆகியவற்றையும் வழங்கி வருகின்றனர். அவர்களுக்கு தெய்வ நிலையம் சார்பில் ரசீது வழங்கப்பட்டு வருகிறது. 
வள்ளலார் தெய்வ நிலைய அலுவலகம் அருகே துவரம் பருப்பு தானிய உண்டியல் வைக்கப்பட்டுள்ளது. தைப்பூச பெருவிழாவை முன்னிட்டு, செயல் அலுவலர் ஆர்.கருணாகரன் மற்றும் முக்கியஸ்தர்கள் முன்னிலையில் துவரம்  பருப்பு உண்டியல் திறக்கப்பட்டது. அதில் 402 கிலோ துவரம் பருப்பு மற்றும் ரூ.1,200 ரொக்கம் காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com