2 தனியார் ஆலைகளுக்கு கரும்பு அளிப்பதில் சிக்கல்: அரசின் உத்தரவுக்கு காத்திருக்கும் விவசாயிகள்!

கடலூர் மாவட்டத்தில் குறிப்பிட்ட 2 தனியார் ஆலைகளுக்கு கரும்பு அளிக்க விரும்பாத விவசாயிகள் அரசின் உத்தரவுக்காக காத்திருக்கின்றனர். 


கடலூர் மாவட்டத்தில் குறிப்பிட்ட 2 தனியார் ஆலைகளுக்கு கரும்பு அளிக்க விரும்பாத விவசாயிகள் அரசின் உத்தரவுக்காக காத்திருக்கின்றனர். 
கடலூர் மாவட்டத்தில் நெல்லுக்கு அடுத்தபடியாக கரும்பு அதிகளவில் பயிரிடப்படுகிறது. கரும்பு அரைவைக்காக மாவட்டத்தில் கூட்டுறவு சர்க்கரை ஆலை ஒன்றும், 3 தனியார் சர்க்கரை ஆலைகளும் இயங்கி வருகின்றன. இந்த நிலையில், பெண்ணாடம், சித்தூரில் இயங்கி வரும் 2 தனியார் சர்க்கரை ஆலைகள் கரும்பு அரைவைப் பருவத்தை தொடங்கவில்லை. இந்த ஆலைகளை நம்பி சுமார் 15 ஆயிரம் ஏக்கரில் விவசாயிகள் கரும்பு பயிரிடுகின்றனர். இந்த 2 ஆலைகளும் ஏற்கெனவே விவசாயிகளுக்கு கரும்புக்கான பாக்கித் தொகை வைத்திருப்பதால் விவசாயிகள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். மேலும், மேற்கண்ட சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு வழங்கவும் விவசாயிகள் விருப்பம் தெரிவிக்கவில்லை. 
டிசம்பர் முதல் மே மாதம் வரை கரும்பு ஆலைகளின் அரைவைக் காலமாக கருதப்படுகிறது. ஆனால், தற்போதைய அரைவைக் காலத்தில் இந்தப் பகுதி விவசாயிகள் தங்களது கரும்புகளை எந்த ஆலைக்கு அனுப்புவது என்று தெரியாமல் குழம்பி வருகின்றனர். இதுகுறித்து வெலிங்டன் நீர்த் தேக்க பாசன விவசாயிகள் சங்கச் செயலர் ஆர்.சோமசுந்தரம் கூறியதாவது: 
பெண்ணாடம் சர்க்கரை ஆலைக்காக சுமார் 11 ஆயிரம் ஏக்கர் நிலத்திலும், சித்தூர் ஆலைக்காக சுமார் 4 ஆயிரம் ஏக்கரிலும் கரும்பு பயிரிடப்படுகிறது. 2017-18-ஆம் ஆண்டில் அரைவை செய்ததில் நிலுவைத் தொகை ரூ.38 கோடியை பெண்ணாடம் ஆலை நிர்வாகம் விவசாயிகளுக்கு வழங்கவில்லை. கரும்பு பாக்கிக்காக ஆலை நிர்வாகம் விவசாயிகள் பெயரில் வங்கியில் பிணைத் தொகையாக பெற்ற ரூ.28 கோடியையும் செலுத்தவில்லை. இதே நிலைதான் சித்தூர் ஆலையிலும் உள்ளது. எனவே, விவசாயிகள் இந்த ஆலைகளுக்கு கரும்பு வழங்க ஆர்வம் காட்டவில்லை.
எனவே, இந்த ஆலைகளுக்காக விளைவிக்கப்பட்ட கரும்புகளை சேத்தியாத்தோப்பு, பெரியசெவலை பகுதிகளில் உள்ள கூட்டுறவு சர்க்கரை ஆலைகளுக்கு வெட்டி அனுப்புவதற்கான டைவர்சன் ஆணையை மாவட்ட நிர்வாகம் சர்க்கரைத் துறை ஆணையரிடம் பெற்றுத்தர வேண்டும். 
தனியார் சர்க்கரை ஆலைகள் அரசால் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட குறைவாக வழங்குவதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும், மாநில அரசால் பரிந்துரைக்கப்படும் விலையை பெறுவதற்கு டைவர்சன் ஆணை அவசியமாகிறது. சேத்தியாத்தோப்பு, பெரிய செவலைக்கு அருகே உள்ள கரும்புகளை அந்தந்த ஆலைகளுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.
இதுகுறித்து கடலூர் மாவட்ட விவசாய சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவர் கார்மாங்குடி எஸ்.வெங்கடேசன் கூறியதாவது: கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் தங்களது முழு அரைவை கொள்ளளவை எட்டியுள்ளதால் மற்ற ஆலைகளின் கரும்பை உடனடியாக அரைவைக்கு எடுக்க முடியாது. இதனால், விவசாயிகளின் கரும்புகள் 2 நாள்களுக்கும் மேலாக ஆலையில் நிறுத்தி வைக்கப்படுவதால் கூடுதல் வாடகை செலுத்துவதோடு, கரும்பின் எடையும் குறைந்து விவசாயிகள் இரட்டிப்பு நஷ்டத்தை சந்திப்பார்கள். எனவே, தனியார் ஆலைகளுக்கு டைவர்சன் ஆணையை ஆட்சியர் பெற்றுத் தந்து மற்ற சலுகைகளும் கிடைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் கூறியதாவது: கடலூர் மாவட்டத்தில் 2 தனியார் சர்க்கரை ஆலைகளுக்கு வெட்டப்படும் கரும்புகளை கூட்டுறவு சங்க சர்க்கரை ஆலைகளுக்கு திரும்புவதற்கான டைவர்சன் ஆணை பெறுவது தொடர்பாக சர்க்கரைத் துறை ஆணையருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. 
சில விவசாயிகள் தனியார் சர்க்கரை ஆலைக்கு டைவர்சன் கோருகின்றனர். ஆனால், ஏற்கெனவே ஆலை நிர்வாகம் பாக்கி வைத்துள்ள நிலையில் அவர்களுக்கே மீண்டும் கரும்பு வழங்க வேண்டுமா என விவசாயிகளிடம் கேட்டுள்ளோம். எனினும், ஆணை பெற்றவுடன் விவசாயிகள் கேட்கும் ஆலைகளுக்கு டைவர்சன் வழங்கப்படும் 
என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com