ஆற்றுத் திருவிழா கோலாகலம்: உற்சவர்கள் தீர்த்தவாரி

கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சனிக்கிழமை நடைபெற்ற ஆற்றுத் திருவிழாவில் பல்லாயிரக்கணக்கா


கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சனிக்கிழமை நடைபெற்ற ஆற்றுத் திருவிழாவில் பல்லாயிரக்கணக்கா
னோர் கலந்து கொண்டனர். கோயில் உற்சவர்கள் தீர்த்தவாரி மேற்கொண்டனர். 
தை மாதத்தின் முதல் நாள் பொங்கல் விழாவாகக் கொண்டாடப்படும் நிலையில், 5-ஆம் நாள் ஆற்றுத் திருவிழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, சனிக்கிழமை கடலூர் தென்பெண்ணையாற்றில் ஆற்றுத் திருவிழா விமரிசையாக நடைபெற்றது. கடலூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அமைந்துள்ள பல்வேறு கோயில்களில் இருந்து அலங்கரிக்கப்பட்ட உற்சவர் சிலைகள் மேளதாள வாத்தியங்களுடன் பெண்ணையாற்றுக்கு ஊர்வலமாக கொண்டு வரப்பட்டன. இந்த ஊர்வலத்தைக் காண கடலூர் பாரதிசாலை, நேதாஜிசாலை, கிழக்கு கடற்கரைச் சாலை, பெண்ணையாற்றுச் சாலைகளில் பொதுமக்கள் திரண்டனர். 
தீர்த்தவாரி: கடலூர் மஞ்சக்குப்பம், புதுப்பாளையம், தாழங்குடா, குண்டுஉப்பலவாடி, ஆனைக்குப்பம், திருப்பாதிரிப்புலியூர், நானமேடு, உச்சிமேடு, கடலூர் துறைமுகம், வண்டிப்பாளையம், புருகீஸ்பேட்டை, தேவனாம்பட்டினம், புதுச்சேரி கன்னியகோயில் உள்ளிட்ட பகுதிகளில் அமைந்துள்ள அம்மன், முருகன், விநாயகர், பராசக்தி கோயில்களிலிருந்து வருகை தந்த 100-க்கும் மேற்பட்ட உற்சவர் சுவாமிகளுக்கு கடலூர் பெண்ணையாற்றில் தீர்த்தவாரி நடைபெற்றது. அப்போது திரளான பக்தர்களும் புனித நீராடி வழிபட்டனர். பிஸ்கட் பாக்கெட்டுகள், காய்கறிகள், கரும்புகளால் அலங்கரிக்கப்பட்டிருந்த உற்சவர்கள் பக்தர்களின் கவனத்தை ஈர்த்தனர். 
ஆற்றுத் திருவிழாவை முன்னிட்டு கடலூர் பெண்ணையாற்றை நோக்கிய சாலைகளின் இரு மருங்கிலும் பொம்மை கடைகள், வளையல், மிட்டாய், வீட்டு உபயோகப் பொருள்கள், கத்தி, அருவாள் கடைகள் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட கடைகள் அமைக்கப்பட்டிருந்தன. மேலும் ஆற்றுத் திருவிழாவில் கொட்டி கிழங்குகள், வாழை பழத் தார்கள், கரும்பு கட்டுகளும் விற்கப்பட்டன. கொட்டி கிழங்குகளை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர்.
பக்தர்களின் பாதுகாப்பு வசதிக்காக தற்காலிக புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டிருந்தது. பக்தர்களின் வசதிக்காக அரசுப் போக்குவரத்துக் கழகம் சிறப்பு பேருந்துகளை இயக்கியது. 108 அவசர ஊர்தி, தீயணைப்பு வாகனங்களும் தயாராக நிறுத்தப்பட்டிருந்தன. இதேபோல, மாவட்டத்தில் செல்லும் கெடிலம், மணிமுத்தாறு, வெள்ளாறு ஆகிய பகுதிகளிலும் ஆற்றுத் திருவிழா நடைபெற்றது.
பண்ருட்டி: பண்ருட்டி 
கெடிலம் ஆற்றில் நடைபெற்ற விழாவுக்கு சுற்றுவட்டார கோயில்களில் இருந்து உற்சவ மூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் மாட்டு வண்டிகள், டிராக்டர்கள் போன்ற வாகனங்களில் கொண்டுவரப்பட்டனர். அங்கு உற்சவ மூர்த்திகளுக்கு தீர்த்தவாரியும், சிறப்பு வழிபாடும் நடைபெற்றது. இதேபோல, கண்டரக்கோட்டை தென்பெண்ணை ஆற்றிலும் பல்லாயிரக்கணக்கானோர் திரண்டனர். இதனால், பண்ருட்டி - கோலியனூர் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஆற்றில் வரிசையாக காட்சியளித்த உற்சவ மூர்த்திகளை பக்தர்கள் தரிசனம் செய்தனர். இதேபோல, கெடிலம் ஆற்றிலும் ஆயிரக்கணக்கானோர் திரண்டனர். விழாவை முன்னிட்டு ஆறுகளில் ராட்டினம் உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்களும், ஏராளமான கடைகளும் இடம்பெற்றிருந்தன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com