வடலூரில் நாளை தைப்பூச ஜோதி தரிசனப் பெருவிழா: இன்று கொடியேற்றம்

கடலூர் மாவட்டம், வடலூரில் அமைந்துள்ள சத்திய ஞான சபையில் 148-ஆவது தைப்பூச ஜோதி தரிசனப் பெருவிழா திங்கள்கிழமை (ஜன. 21) நடைபெறவுள்ளது. முன்னதாக, சன்மார்க்க


கடலூர் மாவட்டம், வடலூரில் அமைந்துள்ள சத்திய ஞான சபையில் 148-ஆவது தைப்பூச ஜோதி தரிசனப் பெருவிழா திங்கள்கிழமை (ஜன. 21) நடைபெறவுள்ளது. முன்னதாக, சன்மார்க்க கொடியேற்றம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.
வள்ளலார் என்று அழைக்கப்படும் ராமலிங்க சுவாமிகளால் நிறுவப்பட்ட வடலூர் சத்திய ஞானசபையில் ஒவ்வோர் ஆண்டும் தைப்பூச நாளன்று ஜோதி தரிசனப் பெருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். அதன்படி, 148-ஆவது தைப்பூச ஜோதி தரிசனப் பெருவிழா திங்கள்கிழமை நடைபெறவுள்ளது. அன்று காலை 6 மணி, 10 மணி, பகல் 1 மணி, இரவு 7 மணி, 10 மணி மற்றும் செவ்வாய்க்கிழமை காலை 5.30 மணி ஆகிய 6 காலங்களில் 7 திரைகள் நீக்கப்பட்டு ஜோதி தரிசனம் காண்பிக்கப்படும்.
தைப்பூச ஜோதி தரிசன விழாவை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5 மணியளவில் அருள்பெருஞ்ஜோதி அகவல்பாராயணமும், காலை 7.30 மணிக்கு தர்ம சாலையில் சன்மார்க்க கொடியேற்றமும் நடைபெறுகிறது. தொடர்ந்து, மருதூர், கருங்குழி வள்ளலார் சந்நிதிகளிலும், காலை 10 மணிக்கு ஞான சபையிலும் கொடியேற்ற நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. இதற்கான ஏற்பாடுகளை திருஅருள்பிரகாச வள்ளலார் தெய்வ நிலையத்தினர் செய்துள்ளனர். 
சிறப்புப் பேருந்துகள் இயக்கம்: ஜோதி தரிசன விழாவைக் காண திரளான பக்தர்கள் வருவர் என எதிர்பார்க்கப்படுவதால் போக்குவரத்துத் துறை சார்பில் 50 சிறப்புப் பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், புறக்காவல் நிலையம், அவசர ஊர்தி வசதியுடன் மருத்துவக் குழு, தீயணைப்பு வாகன வசதிகள் செய்யப்பட்டுள்ளன. 12 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள், நிரந்தரம், தற்காலிகம் என 52 கண்காணிப்பு கேமராக்கள் அமைத்து கண்காணிக்கப்படுகிறது. 
வடலூர் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதி, முக்கிய வீதிகளில் மின் விளக்கு வசதிகள், 80 தற்காலிக கழிப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளன. பேரூராட்சி செயல் அலுவலர் கே.பாலசுப்பிரமணியன் தலைமையில் துப்புரவு ஆய்வாளர் (காட்டுமன்னார்கோவில்) ப.துரைராஜ் மேற்பார்வையில் 197 பேர் சுகாதாரப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com