சுடச்சுட

  

  சிறுபான்மையின மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்திட கடன் வழங்கும் முகாம் வருகிற 24-ஆம் தேதி நடைபெறுவதாக மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் தெரிவித்தார்.
   இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: கடலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் (டாம்கோ) மூலம் சிறுபான்மையின மக்களாகிய கிருத்தவ, இஸ்லாமிய, புத்த, சீக்கிய, பார்சி,  ஜெயின் பிரிவினர் உள்ளிட்டோர் பயன்பெறும் வகையில் தனிநபர் கடன் திட்டம், கல்விக் கடன் திட்டம், சுய உதவிக் குழு கடன் திட்டம், கறவைமாடு கடன் திட்டம் மற்றும் ஆட்டோ கடன் திட்டம் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
   இந்தத் திட்டங்களின் கீழ் பயன்பெறும் வகையில் லால்பேட்டை பேரூராட்சி அலுவலகத்தில் கடன் வழங்கும் முகாம் (லோன் மேளா) வருகிற 24-ஆம் தேதி (வியாழக்கிழமை) காலை 11 மணிக்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் தலைமையில் நடத்தப்படுகிறது. இந்த முகாமில், லால்பேட்டை மற்றும் அதன் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த சிறுபான்மையினர் பங்கேற்கலாம்.
   இந்தத் திட்டங்களில் பயன்பெற விண்ணப்பதாரருக்கு வயது 18 முதல் 60-க்குள் இருக்க வேண்டும். ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே கடனுதவி வழங்கப்படும். வட்டி விகிதம் 5 முதல் 8 சதவீதம் வரை. ஆண்டு வருமான வரம்பு நகர்ப்புறமெனில் ரூ.1.20 லட்சம், கிராமப்புறமெனில் ரூ.98 ஆயிரம். புதிதாக தொழில் செய்பவர்கள், செய்து வரும் தொழிலை விரிவாக்கம் செய்யவும் கடனுதவி பெறலாம்.
   விண்ணப்பங்கள் மாவட்ட ஆட்சியரின் தலைமையில் செயல்படும் மாவட்ட கூர்ந்தாய்வுக் குழு உறுப்பினர்களின் பரிந்துரையுடன் டாம்கோவுக்கு அனுப்பி வைக்கப்படும். கடன் தொகைகள் சம்பந்தப்பட்ட வங்கிக்கு அனுப்பி வைக்கப்பட்டு வங்கி மூலமாக கடன் அளிக்கப்படும். எனவே, 
  விருப்பமுடைய சிறுபான்மையின மக்கள் சாதி, வருமானச் சான்றிதழ், திட்ட தொழில் அறிக்கை, குடும்ப அட்டை அல்லது இருப்பிடச் சான்று, ஆதார் அட்டை, வங்கிக் கணக்கு புத்தகம் மற்றும் வங்கி கோரும் இதர ஆவணங்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இயங்கி வரும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் கடன் விண்ணப்பத்தை பெற்று பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும் என்று அதில் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai