சுடச்சுட

  

  கடலூர் மாவட்டத்தில் வள்ளலார் திருச் சபை கிளைகள், முருகன் கோயில்களில் தைப்பூச திருவிழா திங்கள்கிழமை கோலாகலமாக நடைபெற்றது.
  வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில் ஒவ்வொரு தமிழ் மாதத்திலும் பூசம் நட்சத்திரம் அன்று ஜோதி வழிபாடு நடைபெறும். 
  இதில், தை மாதத்தில் வரும் பூசம் நட்சத்திரத்தில் நடைபெறும் ஜோதி வழிபாடு மிகவும் பிரசித்திபெற்றதாகும். வடலூர் சத்திய ஞான திருச் சபையின் பல்வேறு கிளைகள் கடலூர் மாவட்டத்தில் கடலூர் கடற்கரை சாலை உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும் அமைந்துள்ளன. இந்த திருச் சபைகள் அனைத்திலும் தைப்பூச விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது. 
  வடலூரில் மட்டும் 6 முறை ஜோதி தரிசனம் நடைபெறும் நிலையில், மற்ற சபைகளில் மூன்று அல்லது இரண்டு முறை மட்டுமே ஜோதி தரிசனம் நடத்தப்பட்டு, வள்ளலார் எழுதிய பாடல்கள் பாடப்பட்டன.  வள்ளலாரின் கூற்றின்படி, மாவட்டத்தில் சிறியது முதல் பெரியது வரையிலான அனைத்து சபைகளிலும் ஜோதி தரிசனத்தை முன்னிட்டு அன்னதானம் வழங்கப்பட்டது.
  சிதம்பரம்: தைப்பூச விழாவை முன்னிட்டு, சிதம்பரம் அருகே விபீஷணபுரம் லலிதாம்பாள் நகரில் அமைந்துள்ள சத்திய ஞான சபையில் ஜோதி தரிசனம் திங்கள்கிழமை நடைபெற்றது. காலை 6.30 மணி, பிற்பகல் 1.30 மணி, இரவு 8 மணி ஆகிய 3 வேளைகளில் 7 திரைகள் நீக்கப்பட்டு ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டது. சன்மார்க்க அன்பர்கள் திரளானோர் பங்கேற்று தரிசித்தனர். விழாவை முன்னிட்டு 2 நாள்கள் சுமார் ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
   முன்னதாக, சனிக்கிழமை திருஅருள்கொடியை சி.பி.ஆர்.சிவராஜன் ஏற்றி வைத்தார். தொடர்ந்து 2  நாள்களுக்கு ஆன்மிக சொற்பொழிவு நடைபெற்றது. பேராசிரியர் என்.தில்லைநாயகம், ஒய்வுபெற்ற தலைமை ஆசிரியர் ஜி.இளங்கோவன், பேராசிரியர் வை.நமச்சிவாயம், ஜெப.ராஜமூக்த்தி உள்ளிட்டோர் ராமலிங்க அடிகளாரின் சிறப்புகள் குறித்து சொற்பொழிவாற்றினர். 
  விழாவுக்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழுத் தலைவர் வி.கே.மாரிமுத்து தலைமையில் நிர்வாகிகள் எம்.ஜி.பாரி, வி.விஜயராகவன், உதவிப் பேராசிரியர் டி.எஸ்.எஸ்.ஞானகுமார் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
  முருகன் கோயில்: இதேபோல, தைப்பூசம் முருகக் கடவுளுக்கு உகந்த நட்சத்திரமாகும். எனவே, தைப்பூசத்தை முன்னிட்டு முருகனுக்கு தனிக் கோயில் அமைந்துள்ள ஊர்களிலும், சிவன் கோயில்களில் முருகனின் தனி சந்நிதிகளிலும் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பக்தர்கள் காவடி எடுத்தும், அலகு குத்தியும் நேர்ச்சை செலுத்தினர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai