சிறப்பான திட்டமிடல், செயல்பாடு மூலம் மின் உற்பத்தித் திறனை மேம்படுத்த வேண்டும்

சிறப்பான திட்டமிடல், செயல்பாடுகள் மூலம் மின் உற்பத்தித் திறனை பொறியாளர்கள் மேம்படுத்த வேண்டும் என என்எல்சி இந்தியா நிறுவனத் தலைவர் ராகேஷ்குமார் கூறினார். 

சிறப்பான திட்டமிடல், செயல்பாடுகள் மூலம் மின் உற்பத்தித் திறனை பொறியாளர்கள் மேம்படுத்த வேண்டும் என என்எல்சி இந்தியா நிறுவனத் தலைவர் ராகேஷ்குமார் கூறினார். 
என்எல்சி இந்தியா நிறுவனம் சார்பில் நிலக்கரி, பழுப்பு நிலக்கரி கனிமங்களை வெட்டி எடுக்கும் துறையில் சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் உலகளவில் பயன்படுத்தப்படும் நவீன தொழில்நுட்பங்கள், அந்தத் துறை சந்தித்துவரும் சவால்கள், தீர்வுகள் குறித்த 2 நாள் கருத்தரங்கம்  நெய்வேலியில் அண்மையில் நடைபெற்றது. என்எல்சி இந்தியா நிறுவனம் மற்றும் இந்திய நிலக்கரி நிறுவனங்களின் முன்னாள் தலைவர் எம்.பி. நாராயணன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு கருத்தரங்கை தொடக்கி வைத்துப் பேசியதாவது: 
செயற்கைக் கோள்களின் உதவியுடன் சுரங்கப் பணிகளை மேற்கொள்ளுதல், இயந்திர மனிதர்களை சுரங்கப் பணிகளில் ஈடுபடுத்துதல், கணினி, இணையதளம் உதவியுடன் விவரங்களை பதிவுசெய்தல் ஆகியவை மூலம் உற்பத்தியைப் பெருக்குவதுடன் அதற்கான செலவையும் குறைக்க முடியும் என்றார்.
என்எல்சி நிறுவனத் தலைவர் ராகேஷ்குமார் தலைமை வகித்துப் பேசியதாவது: மின் உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம் நாட்டின் பொருளாதாரம் மேம்படும். தற்போதைய நிலையில் நாட்டின் மின் தேவையில் சுமார் 65 சதவீதம் நிலக்கரி, பழுப்பு நிலக்கரி அனல்மின் நிலையங்கள் மூலம் நிவர்த்தி செய்யப்படுகிறது. சுற்றுச்சூழல் தொடர்பான புதிய சட்டங்களால் உற்பத்திச் செலவு அதிகரிப்பதை கருத்தில்கொண்டு, சிறப்பாக திட்டமிடுதல், செயல்பாடுகளின் மூலம் உற்பத்தித் திறனை மேம்படுத்துவது, உற்பத்திச் செலவை குறைப்பது குறித்து விவாதிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
முன்னதாக, மத்திய நிலக்கரி, சுரங்கத் துறை இணை அமைச்சர் ஹரிபாய் பார்திபாய் சௌத்ரி, மத்திய நிலக்கரி அமைச்சக செயலர் சுமந்தா சௌத்ரி ஆகியோர் அனுப்பிய வாழ்த்து செய்திகளை, முறையே என்எல்சி மின் துறை இயக்குநர் வி.தங்கபாண்டியன், மனித வளத் துறை இயக்குநர் ஆர். விக்ரமன் ஆகியோர் வாசித்தனர்.
கருத்தரங்கில் சமர்ப்பிக்கப்பட்ட தொழில்நுட்ப ஆய்வுக் கட்டுரைகள் அடங்கிய மின்னணு வடிவிலான மலரை எம்.பி. நாராயணன் வெளியிட, முதல் பிரதியை என்எல்சி தலைவர் ராகேஷ்குமார் பெற்றுக் கொண்டார். என்எல்சி சுரங்கத் துறை இயக்குநர் பிரபாகர் சௌக்கி கருத்தரங்கின்  நோக்கம் குறித்து பேசினார். 
சுரங்கத் துறை செயல் இயக்குநர் ஹேமந்த்குமார், கண்காணிப்புத் துறை தலைமை அதிகாரி டி.வெங்கடசுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். கருத்தரங்கில் என்எல்சி உள்ளிட்ட பொதுத் துறை, தனியார் துறைகளைச் சேர்ந்த 250 பொறியாளர்கள் பங்கேற்றனர். 56 ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன.
கருத்தரங்கை முன்னிட்டு நெய்வேலி கற்றல், மேம்பாட்டு மையத்தில் சுரங்கத் துறை தொடர்பான கண்காட்சி நடைபெற்றது. நிலக்கரி சுரங்கங்களுக்கான செயல் இயக்குநர் அரவிந்த் குமார் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com