பொதுத் தேர்வில் செய்யப்பட்ட மாற்றங்கள் என்ன?

பொதுத் தேர்வுகள் தொடர்பான பட்டியல் விவரங்கள் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இதில் தேர்வில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைக்க

பொதுத் தேர்வுகள் தொடர்பான பட்டியல் விவரங்கள் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இதில் தேர்வில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 2018-19-ஆம் கல்வி ஆண்டுக்கான பொதுத் தேர்வுகள் வருகிற மார்ச் மாதம் தொடங்கும் என நிகழ் கல்வியாண்டின் தொடக்கத்திலேயே மாநில அரசின் பள்ளிக் கல்வித் துறை அமைச்சகம் தெரிவித்தது. அதன்படி, அரசு பொதுத் தேர்வை எழுத உள்ள 10-ஆம் வகுப்பு, பிளஸ்1, பிளஸ்2 மாணவ, மாணவிகளுக்கு தேர்வுக்கான கால அட்டவணையை அரசு தேர்வுகள் இயக்ககம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்துக்கு அண்மையில் அனுப்பி வைத்தது. 
அந்த அட்டவணை தற்போது அந்தந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களிடம் வழங்கப்பட்டுள்ளன. 
வருகிற பொதுத் தேர்வில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதால் அதுகுறித்து தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்கு விளக்க வேண்டுமென முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகம் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. அதில், குறிப்பாக வினாத்தாள் வடிவமைப்பில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட மொழித் தேர்வுகள் அனைத்துக்கும் எழுத்துத் தேர்வு மூலம்  90 மதிப்பெண்களும், 10 மதிப்பெண்கள் அக மதிப்பெண்ணாகவும் வழங்கப்படும்.
இதேபோல, செய்முறைத் தேர்வு அல்லாத அனைத்துப் பாடங்களுக்கும் எழுத்துத் தேர்வுக்கு 90 மதிப்பெண்களும், அக மதிப்பெண்ணாக 10  மதிப்பெண்களும் வழங்கப்படுகிறது. செய்முறைத் தேர்வு கொண்ட பாடத்தில் எழுத்துத் தேர்வுக்கு 70 மதிப்பெண்களும், செய்முறைத் தேர்வுக்கு 30 மதிப்பெண்களும் வழங்கப்படும். 
இதில், உயிரி தாவரவியல், உயிரி விலங்கியல் பாடத்தில் தனித் தனியாக தலா 35 மதிப்பெண்களுக்கு தேர்வு நடத்தப்படும். மொத்தம் 600 மதிப்பெண்ணுக்கு இந்தத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன.
பிளஸ்2 மாணவர்களுக்கு வருகிற மார்ச் 1-இல் தேர்வுகள் தொடங்கி 19-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. பிளஸ்1  மாணவர்களுக்கு மார்ச் 6-இல் தேர்வு தொடங்கி 22 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 10-ஆம் வகுப்பு தேர்வு மார்ச் 14-இல் தொடங்கி 29 ஆம் தேதி நிறைவடைகிறது. செய்முறைத் தேர்வுகள் வருகிற பிப்.1 முதல் 12-ஆம் தேதி வரை நடைபெறுகின்றன.
 காலை 10 மணிக்கு தொடங்கும் தேர்வில் முதல் 10 நிமிடங்கள் மாணவர்கள் கேள்விகளை வாசிக்கவும், அடுத்த 5 நிமிடங்கள் தேர்வுக்கூட கண்காணிப்பாளர்கள் மாணவர்களின் விவரங்களை சரிபார்க்கவும் வழங்கப்படும். காலை 10.15 மணிக்கு தொடங்கும் எழுத்துத் தேர்வு பகல் 12.45 மணிக்கு நிறைவுபெறுகிறது. 10-ஆம் வகுப்புக்கு மொழிப் பாடத்தில் மட்டும் தேர்வுகள் மதியம் 2 மணிக்கு தொடங்கி 4.45 மணிக்கு நிறைவடைகிறது.மேலும், தேர்வுத் தாள் தொடர்பான புளூபிரிண்டும் பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், அதன் விவரங்களை மாணவர்களுக்கு எடுத்துக் கூற வேண்டும் என்றும் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com