சுடச்சுட

  

  அனுமதியின்றி தனியார் கல்வி நிறுவனம் செயல்படுவதாகப் புகார்

  By நமது நிருபர், கடலூர்  |   Published on : 24th January 2019 09:44 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கடலூர் மாவட்டம், நெய்வேலியில் தனியார் கல்வி நிறுவனம் உரிய அனுமதியின்றி செயல்படுவதாக எழுந்த புகாரையடுத்து, கல்வித் துறை தீவிர விசாரணை நடத்தி வருகிறது.
  பத்தாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படித்து வரும் மாணவ, மாணவிகளில் பலர் உயர் கல்விக்காக  மருத்துவம், பொறியியல் துறைகளையே தேர்வு செய்கின்றனர். இந்தப் படிப்புகளை தரம் வாய்ந்த கல்லூரிகளிலோ அல்லது அரசுக் கல்லூரிகளிலோ குறைந்த கட்டணத்தில் படிக்க வேண்டுமெனில் நீட் போன்ற போட்டித் தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற வேண்டும்.
  இதற்காக, பள்ளிக் கல்வியுடன் சேர்த்து, போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சியையும் பெற்று வருகின்றனர். பணம் வசதி கொண்டவர்கள் அதற்கான ஏற்பாடுகளைச் செய்துகொண்டுள்ள நிலையில், அரசுப் பள்ளியில் படிப்பவர்களுக்கு அதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசு செய்துள்ளது. அவர்களுக்கு சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
  கடலூர் மாவட்டம், நெய்வேலியில் எந்தவிதமான அனுமதியும் பெறாமல் பிளஸ்-1, பிளஸ்-2  மாணவ, மாணவிகளுக்கு ஐஐடி, ஜெ.இ.இ., நீட் தேர்வுகளுக்கான சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டு வருவது அண்மையில் தெரிய வந்தது.
  இதுகுறித்து கல்வித் துறையினர் தெரிவித்ததாவது:
  நெய்வேலியில் தனியார் பயிற்சி நிறுவனம் சுமார் 400 மாணவ, மாணவிகளுக்கு உயர் கல்வி நுழைவுத் தேர்வுக்கான பயிற்சியை அளித்து வருகிறது. இங்கு பயிலும் மாணவர்கள் அனைவரும் தற்போது பள்ளிகளில் படித்து வருபவர்கள். குறிப்பாக, பிளஸ்-2 மாணவர்கள் சென்னை கோவூரில் உள்ள தனியார் பள்ளியிலும், பிளஸ்-1 மாணவர்கள் விருத்தாசலத்தில் உள்ள தனியார் பள்ளியிலும் படித்து வருகிறார்கள். ஆனால், இவர்கள் பள்ளிக்குச் செல்லாமலேயே நெய்வேலியில் இந்த வகை பயிற்சியைப் பெற்று வருகின்றனர். இது கல்வித் துறையில் நடைபெற்று வரும் மிகப் பெரிய முறைகேடாகும். அவர்கள் வேறு பள்ளியில் படித்து வருவது போன்று வருகைப் பதிவு போன்றவை போலியாக உருவாக்கப்பட்டு, பொதுத் தேர்வை அந்தந்தப் பள்ளிகளுக்குச் சென்று எழுதும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.
  இதுகுறித்து கல்வித் துறை அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்துள்ளோம். இதன் மீது உரிய விசாரணை நடத்தப்பட்டால் தற்போது பிளஸ்-2 படித்து வருவதாகக் கூறி பயிற்சி பெற்று வரும் 200 பேரும் பொதுத் தேர்வை எழுத முடியாது. அதே நேரத்தில், சிபிஎஸ்இ பாடத் திட்டத்தில் பிளஸ்-1 தேர்வு கிடையாது என்பதால், அவர்கள் அடுத்த ஆண்டில்தான் தேர்வு எழுத உள்ளனர் எனத் தெரிவித்தனர்.
  இதுகுறித்து நெய்வேலி பகுதி மக்கள் கூறியதாவது:
  நெய்வேலியில் தினமும் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது. ஒவ்வொருவரிடமும் ஆண்டுக்கு ரூ.2.50 லட்சம் முதல் பணம் வசூலிக்கப்பட்டுள்ளது. ஆனால், பயிற்சி வகுப்புக்கு உரிய அனுமதி பெறப்பட்டுள்ளதா, பள்ளி போன்று நடைபெறுகிறதா என்பது குறித்த எந்த விவரமும் குறிப்பிடப்படவில்லை. இதற்கிடையே, அடுத்த ஆண்டு பிளஸ்-1 சேர்க்கையை நடத்தி முடித்துவிட்டதாகவும் விளம்பரம் செய்துள்ளனர் என்றனர்.
  இதுகுறித்து வடலூர் கல்வி மாவட்ட அலுவலர் திருமுருகன் கூறியதாவது:
  உரிய அனுமதியில்லாமல் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுவதாக தனியார் பயிற்சி நிறுவனம் மீது புகார் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து கடந்த 18-ஆம் தேதி நேரில் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது, உரிய ஆவணங்கள் எதுவும் காண்பிக்கப்படவில்லை. எனவே, அவர்களுக்கு காலக்கெடு வழங்கப்பட்டுள்ளது. அதற்குள் பயிற்சி அளிப்பதற்கான உரிமம் தொடர்பான ஆவணங்களை அளிக்காவிட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு அவர்களது பள்ளி நேரத்தில் எந்தப் பயிற்சியும் அளிக்க முடியாது. அவர்கள் பள்ளிக்குச் செல்லாமல் எப்படி தனியாகப் பயிற்சி பெறுகிறார்கள் என்பதை விசாரித்து வருவதுடன், மாணவர்களின் எதிர்கால நலன் பாதிக்கப்படாத வகையில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார் அவர்.
  இதுதொடர்பாக பயிற்சியளித்து வரும் அறக்கட்டளை நிர்வாகத்தினரிடம் தொடர்பு கொண்ட போது, கருத்து தெரிவிக்க மறுத்து விட்டனர்.
  அறிக்கை அளிப்பு: இதுகுறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கா.பழனிச்சாமி கூறுகையில், இந்த பிரச்னை தொடர்பாக மாவட்டக் கல்வி அலுவலரிடமிருந்து புதன்கிழமை அறிக்கை பெறப்பட்டுள்ளது. அதில், விதிமீறல்கள் நடைபெற்றிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, சம்பந்தப்பட்ட அறக்கட்டளையில் நேரில் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.


   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai