சுடச்சுட

  

  அண்ணாகிராமம் வட்டாரத்தில் நெல் பயிரில் காணப்படும் குலைநோய் தாக்குதலைக் கட்டுப்படுத்துவது குறித்து வேளாண் துறை ஆலோசனை வழங்கியுள்ளது.
  இந்த வட்டாரத்தில், நெல்லிக்குப்பத்தைச் சுற்றியுள்ள கிராமங்களில் பின் சம்பா பட்டத்தில் நடவு செய்யப்பட்டுள்ள பிபிடி-5204 ரக நெல்லில் குலைநோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தப் பகுதியில் உள்ள நெல் வயல்களில் அண்ணாகிராமம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் க.பாலசுப்பிரமணியன் தலைமையில், கடலூர் கரும்பு ஆராய்ச்சி நிலைய பயிர் நோயியல் உதவிப் பேராசிரியர் ரவிச்சந்திரன், அண்ணாகிராமம் வேளாண்மை அலுவலர் சுரேஷ், நெல்லிக்குப்பம் உதவி வேளாண்மை அலுவலர் சந்திரசேகரன் ஆகியோர் அடங்கிய குழுவினர் செவ்வாய்க்கிழமை நேரில் ஆய்வு செய்தனர். குலைநோயை கட்டுப்படுத்துவதற்கான மேலாண்மை முறை குறித்து க.பாலசுப்பிரமணியன் தெரிவித்ததாவது: 
  வரப்பு, வாய்கால்களில் களைகளை அகற்றி சுத்தமாக பராமரிக்க வேண்டும். அதிகப்படியான தழைச் சத்து உரம் இடுதலை குறைக்க வேண்டும். தழைச் சத்து இடும்பட்சத்தில் யூரியாவுக்கு பதிலாக அம்மோனியம் சல்பேட் உரத்தை கதிர் வெளிவரும் தருணத்தில் ஏக்கருக்கு 25-30 கிலோ வீதம் இட வேண்டும். 
  பூஞ்சாண மருந்தில் டிரைசைக்லோசோல் மருந்தை ஒரு லிட்டர் தண்ணீருக்கு ஒரு கிராம் என்ற அளவில் கலந்து தெளிக்க வேண்டும். 
  சில வயல்களில் ஆங்காங்கே தென்படும் இலைப்புள்ளி நோய்க்கு மேன்கோசெப் 2 கிராம் வீதம் ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும். எந்தக் காரணத்தைக் கொண்டும் டிரைசைக்லோசோல் மற்றும் மேன்கோசெப் மருந்தை கலந்து தெளிக்கக் கூடாது. இரு நோய்களும் இருக்கும்பட்சத்தில் முதலில் குலைநோய்க்கு உண்டான டிரைசைக்லோசோல் மருந்தை தெளித்து, பின்னர் ஒரு வாரம் கழித்து மேன்கோசெப் மருந்தை தெளிக்க வேண்டும் என்றார் அவர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai