ஆசிரியர்கள் போராட்டத்தால் கிராமப்புற மாணவர்கள் பாதிப்பு

ஆசிரியர்களின் போராட்டத்தால் கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

ஆசிரியர்களின் போராட்டத்தால் கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இடைநிலை ஆசிரியர்களுக்கான ஊதிய விகித முரண்பாடுகளைக் களைய வேண்டும், 21 மாத நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 9 கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்தக் கூட்டமைப்பில் ஆசிரியர் கூட்டணியினர் முக்கிய பங்கு வகித்து வருகின்றனர். கடலூர் மாவட்டத்தில் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் அரசு ஊழியர்களைவிட தீவிரமாக ஆசிரியர்கள் ஈடுபட்டு வருவதால், கிராமப்புற மாணவர்களின் கல்வி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் அரசு, அரசு நிதி உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் என மொத்தம் 2,234 பள்ளிகள் உள்ளன. இவற்றில் அரசு,  அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளின் ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  
இதனால், உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளைப் பொருத்த வரையில், அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த 65 சதவீதம் ஆசிரியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். அதே நேரம், அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளைப் பொருத்த வரையில், 12 சதவீதம் பேர் மட்டுமே இந்தப் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். இதனால், 292 பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தொடக்கப் பள்ளிகளைப் பொருத்தவரையில், அரசு, அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளாக மாவட்டத்தில் சுமார் 1,600 பள்ளிகள் செயல்படுகின்றன. இவற்றில், ஓராசிரியர், ஈராசிரியர் பள்ளிகள் கணிசமாக உள்ளன. தற்போதைய போராட்டத்தில் அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 8 ஆயிரம் ஆசிரியர்களில் 91 சதவீதத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 
இதனால், சுமார் ஆயிரம் பள்ளிகள் வரை முழுமையாக இயங்கவில்லை.  பெரும்பாலான பள்ளிகளில் சத்துணவு அமைப்பாளர்கள், சமையலர், உதவியாளர் ஆகியோர் பள்ளிகளைத் திறந்து வைத்து மாணவர்களை வெளியில் விடாமல் கவனித்து கொண்டனர். அவர்களும் மதிய உணவுக்குப் பின்னர் வீட்டுக்குச் சென்றுவிட்டதால், மாணவர்களும் கல்வி கற்க முடியாமல் வீடு திரும்பினர். அதே நேரம், அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் 11 சதவீதம் ஆசிரியர்கள் மட்டுமே போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக தனியார் பள்ளிகள் முழுமையாக இயங்கின.
இதுகுறித்து, குண்டு உப்பலவாடியைச் சேர்ந்த அரசுப் பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் கூறுகையில், "கிராமப்புறத்தில் அதிகமாக அரசுப் பள்ளிகளே செயல்படுகின்றன. மேலும், தனியார் பள்ளிகளுக்கு அதிக கட்டணம் கொடுத்து சேர்க்க முடியாத ஏழைகளே அரசுப் பள்ளிகளில் தங்களது குழந்தைகளைப் படிக்க வைக்கின்றனர். 
எனவே, போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்கள், எங்களைப் போன்றவர்களின் ஏழைக் குழந்தைகளின் கல்வியைக் கருத்தில் கொண்டு, பணிக்குத் திரும்ப முன்வர வேண்டும்' என்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com