ஜாக்டோ - ஜியோ மறியல்: 2,320 பேர் கைது

கடலூர் மாவட்டத்தில் கோரிக்கையை வலியுறுத்தி, மறியலில் ஈடுபட்ட ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் 2,320 பேரை காவல் துறையினர் புதன்கிழமை கைது செய்தனர்.

கடலூர் மாவட்டத்தில் கோரிக்கையை வலியுறுத்தி, மறியலில் ஈடுபட்ட ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் 2,320 பேரை காவல் துறையினர் புதன்கிழமை கைது செய்தனர்.
பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துதல், அங்கன்வாடி மையங்களில் தொடங்கப்பட்டுள்ள0 எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளுக்கு இடைநிலை ஆசிரியர்களை விதிகளுக்குப் புறம்பாக பணிமாற்றம் செய்யக் கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ செவ்வாய்க்கிழமை (ஜன. 22) முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. 
அதன் ஒரு பகுதியாக புதன்கிழமையும் மாவட்டத்தில் உள்ள 10 வட்டத் தலைநகரங்களில் மறியல் போராட்டம் நடைபெற்றது.
கடலூரில் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் எல்.அரிகிருஷ்ணன் தலைமையில் மறியலில் ஈடுபட்ட 250 பேர் கைது செய்யப்பட்டனர்.  இதேபோல, விருத்தாசலத்தில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையிலும், குறிஞ்சிப்பாடியில் மாவட்டத் தலைவர் சேரலாதன் தலைமையிலும், பண்ருட்டியில் வட்டச் செயலர் செந்தில்குமார் தலைமையிலும், திட்டக்குடியில் ஒருங்கிணைப்பாளர் பாலசுப்பிரமணியன் தலைமையிலும், வேப்பூரில் மாநில நிர்வாகி பாக்யராஜ் தலைமையிலும் மொத்தமுள்ள 10 வட்டங்களிலும் மறியலில் ஈடுபட்ட 2,320 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் 1,272 பேர் பெண் ஊழியர்கள், ஆசிரியைகள் ஆவர்.
ஜாக்டோ-ஜியோ போராட்டத்தினால் மாவட்டத்தில் 25.42 சதவீதம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பணிக்கு வரவில்லை என மாவட்ட நிர்வாகம் தெரிவித்தது.
கல்வித் துறையில் அதிகபட்சமாக ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள் 90 சதவீதம் பேர் பணிக்கு வரவில்லை என்று கூறப்படுகிறது.
இந்தப் போராட்டம் வியாழன், வெள்ளி (ஜன. 24, 25) நாள்களிலும் தொடரும் என அமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எல்.அரிகிருஷ்ணன் தெரிவித்தார். 
சிதம்பரத்தில்: சிதம்பரம் வட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி, இரண்டாம் நாளாக புதன்கிழமை நடைபெற்ற வேலைநிறுத்தத் போராட்டத்தின் போது, காந்தி சிலை அருகே மறியலில் ஈடுபட்டனர்.
மறியலில் ஈடுபட்ட மாநில ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர் வே.மணிவாசகம் உள்பட 425 பேரை நகரக் காவல் துறையினர் கைது செய்து, தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com