சுடச்சுட

  

  நகராட்சிகளில் இயற்கை உரம் விற்பனைக்கு நடவடிக்கை: மண்டல இயக்குநர் தகவல்

  By DIN  |   Published on : 25th January 2019 08:46 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  நகராட்சி அலுவலகங்களில் இயற்கை உரம் விற்பனை செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக நகராட்சிகளின் செங்கல்பட்டு மண்டல இயக்குநர் இளங்கோவன் கூறினார்.
   இவர் கடலூர் நகராட்சியில் வியாழக்கிழமை ஆய்வுப் பணியில் ஈடுபட்டார். பின்னர், சிதம்பரம், விருத்தாசலம், பண்ருட்டி, நெல்லிக்குப்பம், கடலூர் ஆகிய நகராட்சிகளின் ஆணையர்கள், பொறியாளர்களுடன், அந்தந்த நகராட்சிகளில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சிப் பணிகள் தொடர்பாக ஆய்வு செய்தார்.
   தொடர்ந்து செய்தியாளர்களிடம் இளங்கோவன் கூறியதாவது: செங்கல்பட்டு மண்டலத்தில் 19 நகராட்சிகள் உள்ளன. இதில், சிதம்பரம் உள்பட 10 நகராட்சிகள் தெருக்கள், பொது இடங்களில் குப்பைத் தொட்டிகள் இல்லாத நகரங்களாக மாற்றப்பட்டுள்ளன. இதேபோல மற்ற நகராட்சிகளும் மாற்றப்படும். ஏனெனில், தலா 400 வீடுகளுக்கு ஒரு பேட்டரி வாகனம், 1,200 வீடுகளுக்கு ஒரு ஆட்டோ என்ற வகையில் குப்பை வாகனங்கள் வழங்கப்பட்டு தினந்தோறும் குப்பைகளை சேகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
   மேலும், நகராட்சிகளில் வார்டுதோறும் குப்பைகள் சேகரிக்கப்பட்டு அங்கேயே இயற்கை உரமாக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. இந்த உரத்தை பொதுமக்களுக்கு விற்பனை செய்திட ஒவ்வொரு நகராட்சியிலும் பேருந்து நிலையம், நகராட்சி அலுவலகங்களில் தனி மையம் ஏற்படுத்தப்படும். இங்கு பொதுமக்கள் மிகவும் குறைந்த விலையில் இயற்கை உரங்களை பெறலாம்.
   குடிநீர் ஏடிஎம் திட்டம் தற்போது மண்டலத்தில் 5 நகராட்சிகளில் பயன்பாட்டில் உள்ளது. மற்ற நகராட்சிகளில் இதுதொடர்பான பணிகள் நடைபெற்று வருகின்றன. கடலூர் நகராட்சியில் புதை சாக்கடை திட்டத்தில் உள்ள குளறுபடிகள் நீக்கப்படும் என்றார் அவர். அப்போது, கடலூர், விருத்தாசலம் நகராட்சிகளின் ஆணையர் க.பாலு, நெல்லிக்குப்பம் நகராட்சி ஆணையர் பிரபாகரன், சிதம்பரம் நகராட்சி ஆணையர் சுரேந்திரஷா, பண்ருட்டி நகராட்சி ஆணையர் வெங்கடாசலம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai