சுடச்சுட

  

  விருத்தாசலம் நகராட்சியில் நில அளவைகள் கணினி மயம்: இ-சேவை மையங்களிலேயே பட்டா மாறுதல் பெறலாம்

  By கடலூர்,  |   Published on : 25th January 2019 08:18 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  விருத்தாசலம் நகராட்சி எல்லைகளில் உள்ள நிலங்கள், வீட்டுமனைகளின் விவரங்கள் இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்தது. இதனால், இ-சேவை மையங்களிலேயே பட்டா மாறுதலைப் பெறக்கூடிய வசதி ஏற்பட்டுள்ளது.
  இதுகுறித்து மாவட்ட செய்தி -மக்கள் தொடர்பு அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மாவட்டத்தில் உள்ள 10 வட்டங்களில் கிராமப்புற நிலங்கள் கணினிமயமாக்கப்பட்டு, பட்டா மாறுதல் பணியானது வருவாய்த் துறை, நில அளவைத் துறைப் பணியாளர்கள் மூலம் தமிழ்நிலம் மென்பொருள் இணையதளத்தின் வாயிலாக நடைபெற்று வருகிறது. மேலும், கடலூர், சிதம்பரம், பண்ருட்டி, நெல்லிக்குப்பம் ஆகிய நான்கு நகராட்சி எல்லைக்கு உள்பட்ட நில அளவை ஆவணங்கள் கணினிமயமாக்கப்பட்டு, பட்டா மாறுதல் பணி தமிழ்நிலம் (நகரம்) மென்பொருள் இணையதளத்தின் வாயிலாக நடைபெற்று வருகிறது.
  இதன் தொடர்ச்சியாக, விருத்தாசலம் நகராட்சிக்கு உள்பட்ட நில அளவை ஆவணங்கள் கணினிமயமாக்கப்பட்டு பட்டா மாறுதல் பணி இணையதளம் வாயிலாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. 
  இந்த வசதியைப் பொதுமக்கள் பயன்படுத்தி, பொது சேவை மையம், தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம் ஆகிய இடங்களில் உள்ள இ-சேவை மையங்கள், புதுவாழ்வு மையங்கள் ஆகியவை மூலம் பட்டா மாறுதல் விண்ணப்பங்களை இணையதளம் வழியாக அளிக்கலாம்.
  மனுதாரர் சொத்து விவரங்கள் குறித்த அசல் ஆவணங்கள், மூல ஆவணங்கள், வில்லங்கச் சான்று, அது தொடர்பான ஆவணங்கள் ஆகியவற்றை இந்த மையங்களில் அளிக்க வேண்டும்.
  அவை படியெடுக்கப்பட்டு (scan) உடனடியாக மனுதாரரிடம் ஒப்படைக்கப்படும்.
  மேலும், மனுவைப் பெற்றுக் கொண்டமைக்கான ஒப்புதல் சீட்டும் வழங்கப்படும். மனு ஏற்றுக் கொள்ளப்பட்ட விவரம் மனுதாரருக்கு செல்லிடப்பேசிக்கு குறுஞ்செய்தி மூலம் தெரிவிக்கப்படும்.
  பட்டா மாறுதல் ஆணையைப் பொது சேவை மையங்களில் மனுதாரர்கள் பெற்றுக் கொள்ளலாம். இந்தப் பட்டாவில் "க்யூஆர் கோடு' (QR Code) உள்ளதால், வட்டாட்சியர் கையொப்பம் தேவையில்லை.
  இதன் மூலம் பொதுமக்கள் வட்ட அலுவலகம் சென்று மனு அளிப்பது தவிர்க்கப்பட்டு, தங்களது இருப்பிடத்துக்கு அருகே உள்ள சேவை மையங்களில் மனுக்கள் அளிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது என அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai