ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினர் மறியல்: 2,200 பேர் கைது

கடலூரில் சாலை மறியலில் ஈடுபட்ட ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினர் 2,200 பேர் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனர்.

கடலூரில் சாலை மறியலில் ஈடுபட்ட ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினர் 2,200 பேர் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனர்.
 அரசுப் பணியாளர்கள், ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். அங்கன்வாடி மையங்களில் தொடங்கப்படும் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளுக்கு இடைநிலை ஆசிரியர்களை விதிகளுக்கு புறம்பாக பணிமாற்றம் செய்யக் கூடாது என்பன உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
 இந்தப் போராட்டத்தில் பங்கேற்றுள்ள ஆசிரியர்கள், மாணவர்களின் நலன் கருதி பணிக்கு திரும்ப வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது. இதையடுத்து, இந்தப் போராட்டம் வியாழக்கிழமை நடைபெறுமா என எதிர்பார்த்த நிலையில், வட்டத் தலைநகரங்களில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த மறியல் போராட்டம் மாவட்டத் தலைநகரத்தில் நடத்துவதென மாற்றியமைக்கப்பட்டது. அதன்படி, வியாழக்கிழமை ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினர் திரளானோர் கடலூர் மாவட்ட ஆட்சியர் பழைய அலுவலகம் முன் திரண்டனர்.
 கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் எல்.அரிகிருஷ்ணன் தலைமையில் கோரிக்கையை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பியதோடு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் பங்கேற்ற 1,200 பெண்கள் உள்பட 2,200 பேரை போலீஸார் கைது செய்தனர். மறியல் போராட்டத்தில் நிர்வாகிகள் ஆர்.ஜனார்த்தனன், பாலசுப்பிரமணியன், மகேஷ், சதீஷ் உள்பட பல்வேறு சங்கங்களின் நிர்வாகிகள், ஓய்வுபெற்ற ஊழியர் சங்கங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
 கடலூர் மாவட்டம் முழுவதும் 26 சதவீத பணியாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதாக மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. கல்வித் துறையில் தொடக்கப் பள்ளிகள் அளவில் தொடர்ந்து 90 சதவீதத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் போராட்டத்தில் பங்கேற்றதால் மாவட்டத்தில் மூன்றாவது நாளாகவும் பெரும்பாலான பள்ளிகள் மூடப்பட்டிருந்தன.
 அரசு அலுவலகங்களில் பணிகள் பாதிப்பு: ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினரின் வேலைநிறுத்தப் போராட்டத்தால் அரசு அலுவலகங்களில் பணிகள் பாதிக்கப்பட்டன. இதனால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர். பண்ருட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மொத்தப் பணியாளர்கள் 41 பேரில் 23 பேர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மொத்தப் பணியாளர்கள் 43 பேரில் 21 பேர் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
 பண்ருட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் மொத்தப் பணியாளர்கள் 189 பேரில் 65 பேர் போராட்டத்தில் பங்கேற்றனர். இதேபோல, குறிஞ்சிப்பாடி வட்டாட்சியர் அலுவலக பணியாளர்களில் 50 சதவீதம் பேர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளர். இதனால் அரசு அலுவலகங்கள் வெறிச்சோடிக் காணப்பட்டன.
 பண்ருட்டி வட்டாரக் கல்வி அலுவலக கட்டுப்பாட்டின்கீழ் உள்ள 102 தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் 69 பள்ளிகள் மூடியிருந்தன. இதேபோல, குறிஞ்சிப்பாடியில் உள்ள 132 பள்ளிகளில் 110 பள்ளிகள் மூடியிருந்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com