சுடச்சுட

  

  ஆசிரியர் பணியிடத்துக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என கடலூர் முதன்மைக் கல்வி அலுவலர் கா.பழனிச்சாமி தெரிவித்தார்.
   இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: வேலைநிறுத்தத்தில் ஈடுப்பட்டுள்ள அனைத்து ஆசிரியர்களும் கல்வித் துறை செயலர், கல்வித் துறை இயக்குநர்களின் ஆணைப்படி சனிக்கிழமை (ஜன.26) குடியரசு தின விழாவில் அவரவர் பள்ளியில் கட்டாயம் தேசியக்கொடி ஏற்ற நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டும். சனிக்கிழமை முதல் பள்ளிக்கு தொடர்ந்து வருபவர்களுக்கு எவ்விதமான ஒழுங்கு நடவடிக்கையும் இல்லை. ஆனால், பணிக்கு வராத நாள்களுக்கு சம்பளம் வழங்கப்படாது.
   மேலும், திங்கள்கிழமை முதல் ஆசிரியர் பணிக்கு தகுதி தேர்வுகளில் வெற்றி பெற்றவர்களுக்கும், இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர், முதுகலை ஆசிரியர்களுக்குரிய தகுதிகளை பெற்றிருக்க கூடிய வேலையில்லா பணிநாடுநர்களுக்கு பணி வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஓய்வு பெற்ற ஆசிரியர்களையும் பயன்படுத்தி கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவர்களுக்கு பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் மாதத்துக்கு ரூ.10 ஆயிரம் வழங்க அரசு ஆணையிட்டுள்ளது.
   தகுதிவாய்ந்த பணிநாடுநர்கள் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளைப் பொருத்தவரை அந்தந்த வட்டாரக் கல்வி அலுவலர்களிடம் விண்ணப்பத்தை நேரில் ஒப்படைக்கப்பட வேண்டும்.
   உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் காலிப் பணியிடத்துக்கேற்ப அந்தந்த பள்ளித் தலைமை ஆசிரியர்களிடம் விண்ணப்பங்கள் ஒப்படைக்கப்பட வேண்டும். தலைமை ஆசிரியர்கள் விண்ணப்பங்களை தொகுத்து மாவட்ட கல்வி அலுவலர்களிடம் ஒப்படைக்க வேண்டும்.
   உடனடியாக பணி வழங்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. அனைத்துப் பள்ளிகளும் திங்கள்கிழமை முதல் தொடர்ந்து செயல்பட மாவட்டக் கல்வி அலுவலர்கள், வட்டாரக் கல்வி அலுவலர்கள் உரிய நடவடிக்கை எடுக்க அரசு ஆணையிட்டுள்ளது என்று அதில் தெரிவித்துள்ளார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai