சுடச்சுட

  

  ஜாக்டோ-ஜியோ தொடர் போராட்டம்: பள்ளிகள் முடக்கம்

  By  கடலூர்,  |   Published on : 26th January 2019 08:29 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு சார்பில் நடைபெறும் வேலைநிறுத்தப் போராட்டத்தால் கடலூர் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை சுமார் 26 சதவீத அரசு ஊழியர்கள் பணிக்கு வரவில்லை. ஆனால், தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் சுமார் 90 சதவீதம் பேர் பணிக்குச் செல்லாததால், கடந்த 4 நாள்களாக பள்ளிகள் முடங்கியுள்ளன.
   இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும், பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 9 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்தது. இந்தப் போராட்டம் கடந்த 22-ஆம் தேதி தொடங்கியது.
   மறியலில் ஈடுட்ட 2,500 பேர் கைது: போராட்டத்தின் 4-ஆவது நாளான வெள்ளிக்கிழமை மாவட்ட அளவிலான மறியல் போராட்டம் கடலூரில் பழைய மாவட்ட ஆட்சியரகம் அருகே நடைபெற்றது. அப்போது, கூட்டமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எல்.அரிகிருஷ்ணன் தலைமையில் திரளான ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர்.
   அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர், மறியலில் ஈடுபட்ட 1,300 பெண்கள் உள்பட 2,500 பேரை கைதுசெய்து கடலூரில் உள்ள தனியார் மண்டபத்தில் காவலில் வைத்தனர்.
   தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தால் கடலூர் மாவட்டத்தில் சுமார் 26 சதவீதம் அரசு ஊழியர்கள், பணியாளர்கள் பணிக்கு வரவில்லை. அதே நேரத்தில், தொடக்கப் பள்ளிகள் அளவில் சுமார் 90 சதவீதம் ஆசிரியர்கள் பணிக்குச் செல்லாததால் கடந்த 4 நாள்களாக தொடர்ந்து பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.
   7 பேர் மீண்டும் கைது: கைதான அனைவரும் இரவு 7 மணியளவில் விடுவிக்கப்பட்டனர். ஆனால், மண்டபத்திலிருந்து வெளியேறியவர்களில் ஜாக்டோ - ஜியோ மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர் பெருஞ்சித்தரனார், அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலர் ஆர்.பாலசுப்பிரமணியன், பல்வேறு ஆசிரியர் சங்கங்களைச் சேர்ந்த சாஸ்தா, ரட்சநாதன், அறிவழகன், தாமோதரன் உள்ளிட்ட 7 பேரை போலீஸார் மீண்டும் கைதுசெய்தனர்.
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai