சுடச்சுட

  

  பண்ருட்டியில் சாலை ஆக்கிரமிப்பால் போக்குவரத்துக்கு இடையூறு

  By நமது நிருபர், நெய்வேலி  |   Published on : 26th January 2019 08:34 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பண்ருட்டி நகரில் சாலையோர ஆக்கிரமிப்புகளால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதாக சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
   வியாபார நகரமான பண்ருட்டியில் முக்கிய சாலைகளாக கும்பகோணம் சாலை, கடலூர் சாலை, ராஜாஜி சாலை, காந்தி சாலை ஆகியவை உள்ளன. இந்த சாலைகளில் பெரும்பாலானவை ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ளன. இதனால், போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு விபத்துகள் நடைபெறுவதாக வாகன ஓட்டிகள், பொதுமக்கள் புகார் கூறுகின்றனர். குறிப்பாக, சாலையோர கடை உரிமையாளர்களில் பலர் நடைபாதையை ஆக்கிரமித்து கடைகளை அமைக்கின்றனர். சாலையோர வியாபாரிகளும் சாலையை ஆக்கிரமித்து கடை விரிக்கின்றனர்.
   இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களும் சாலையை ஆக்கிரமித்து நிறுத்தப்படுவதாக சமூக ஆர்வலர்கள் புகார் கூறுகின்றனர். இதுகுறித்து அவர்கள் மேலும் கூறியதாவது: பண்ருட்டி கடை வீதியில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த நேரத்தில் சரக்கு வாகனங்களை நிறுத்தி பொருள்களை ஏற்றி, இறக்கக் கூடாது என்ற அறிவிப்பு பெயரளவிலேயே உள்ளது. இதனால் காந்தி சாலையில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
   இதை காவல் துறையினரும் கண்டுகொள்வதில்லை. நகரில் பல ஆண்டுகளாக சாலை ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை. எனவே, இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
   
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai