ரூ.23,800 கோடியில் புதிய திட்டங்கள்: தமிழக அரசுடன் என்எல்சி ஒப்பந்தம்

சென்னையில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில், தமிழகத்தில் ரூ. 23 ஆயிரத்து 800 கோடி மதிப்பீட்டில் சுரங்கம், புதிய மின் திட்டங்களை

சென்னையில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில், தமிழகத்தில் ரூ. 23 ஆயிரத்து 800 கோடி மதிப்பீட்டில் சுரங்கம், புதிய மின் திட்டங்களை அமைக்க என்எல்சி இந்தியா நிறுவனம் தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது.
 தமிழகத்தில் நெய்வேலி, தூத்துக்குடி பகுதிகளில் என்எல்சி இந்தியா நிறுவனம் மின் திட்டங்களை செயல்படுத்தி வரும் நிலையில், திருநெல்வேலி, விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்களில் புதிய திட்டங்களுக்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் அடுத்தகட்டமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ரூ.23 ஆயிரத்து 800 கோடி மதிப்பில் பழுப்பு நிலக்கரி சுரங்கங்கள், அனல் மின் நிலையங்கள், சூரியஒளி மின் நிலையங்களை அமைக்க தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
 சென்னையில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் ஒரு பகுதியாக இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. என்எல்சி சார்பில் திட்டம் மற்றும் செயலாக்கத் துறை இயக்குநர் நாதள்ள நாகமகேஷ்வர்ராவ், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் சார்பில் மின் உற்பத்தித் துறை இயக்குநர் ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். பின்னர், என்எல்சி தலைவர் ராகேஷ்குமார் ஒப்பந்தத்தை தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியிடம் வழங்கினார்.
 இந்த ஒப்பந்தப்படி, என்எல்சி நிறுவனம் தமிழகத்தில் ஆண்டுக்கு 150 லட்சத்து 50 ஆயிரம் டன் பழுப்பு நிலக்கரி வெட்டி எடுக்கும் திறன்கொண்ட சுரங்கங்களையும், மணிக்கு 26 லட்சத்து 40 ஆயிரம் யூனிட் மின்சக்தி உற்பத்தி செய்யும் திறன்கொண்ட அனல்மின் நிலையங்களையும், மணிக்கு 10 லட்சம் யூனிட் மின் உற்பத்தி திறன்கொண்ட சூரியஒளி மின் நிலையங்களையும் அமைக்க உள்ளது. இந்தத் திட்டங்கள் மூலம் சுமார் 1,250 பேருக்கு நேரடியாகவும், சுமார் 7,500 பேருக்கு மறைமுகமாகவும் வேலை வாய்ப்புகளை என்எல்சி வழங்க உள்ளது. இதற்கான அனைத்து அடிப்படை வசதிகளையும், ஒத்துழைப்பையும் தமிழக அரசு வழங்க உள்ளது.
 என்எல்சி கண்காட்சி அரங்கம்: உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை முன்னிட்டு சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெற்ற மாபெரும் கண்காட்சியில் என்எல்சி இந்தியா நிறுவனம் சார்பில் அரங்கு அமைக்கப்பட்டிருந்தது. இந்த அரங்கை தமிழக அமைச்சர்கள், தொழிலதிபர்கள் பார்வையிட்டனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com