என்எல்சி அனல்மின் நிலையத்தில் புனல்மின் நிலையம் : நிறுவன தலைவர் பெருமிதம்

நெய்வேலி இரண்டாம் அனல்மின் நிலையத்தின் குளிரூட்டும் கோபுரங்களுக்காக நீரை எடுத்துச் செல்லும் பாதையில்


நெய்வேலி இரண்டாம் அனல்மின் நிலையத்தின் குளிரூட்டும் கோபுரங்களுக்காக நீரை எடுத்துச் செல்லும் பாதையில் சிறிய புனல் மின் நிலையம் அமைத்து என்எல்சி இந்தியா நிறுவனம் சாதனை புரிந்துள்ளதாக 
அதன் தலைவர் ராகேஷ் குமார் கூறினார்.
நெய்வேலி பாரதி விளையாட்டு அரங்கில் சனிக்கிழமை நடைபெற்ற குடியரசு தின விழாவுக்கு ராகேஷ்குமார் தலைமை வகித்து தேசியக் கொடி ஏற்றி வைத்தார். பின்னர், என்எல்சி, மத்திய தொழிலகப் பாதுகாப்பு, தீயணைப்பு, ஊர்க்காவல், தேசிய மாணவர் படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். மனித வளத் துறை இயக்குநர் ஆர்.விக்ரமன் வரவேற்றார். 
பின்னர் என்எல்சி தலைவர் பேசியதாவது: என்எல்சி நிறுவனம் அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.23,800 கோடி மதிப்பில் சுரங்கம், அனல் மற்றும் சூரிய மின் நிலையங்கள் அமைக்க தமிழக அரசுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. 
நெய்வேலி இரண்டாம் அனல்மின் நிலையத்தின் குளிரூட்டும் கோபுரங்களுக்காக நீரை எடுத்துச் செல்லும் பாதையில் ஆண்டுக்கு 1.10 லட்சம் யூனிட் பசுமை மின் சக்தியை உற்பத்தி செய்யும் திறன்கொண்ட 4ஷ்5 கிலோவாட் சிறிய புனல் மின்நிலையத்தை, ரூ.92 லட்சம் செலவில் உலகில் முதல் முறையாக என்எல்சி நிறுவனம் அமைத்து சாதனை புரிந்துள்ளது என்றார் அவர். 
விழாவில், என்எல்சி மருத்துவத் துறையில் சிறப்பு நிலை அலுவலக உதவியாளராக பணியாற்றும் எஸ்.லட்சுமி, அவரது கணவர் கே.பாஸ்கரன் கெளரவிக்கப்பட்டனர். மாற்றுத் திறனாளிகளுக்கு மூன்று சக்கர சைக்கிள்கள் வழங்கப்பட்டன. என்எல்சி நிறுவனத்தில் நீண்ட நாள் சிறப்பாகப் பணிபுரிந்தவர்கள், சிறந்த தரக் குழுக்கள், தூய்மையை பராமரித்த தொழிலகங்கள், பொதுநலப் பணிகளில் தன்னார்வத்துடன் ஈடுபட்ட ஊழியர்கள், கல்வி மற்றும் விளையாட்டில் சிறந்து விளங்கியவர்களுக்கு விருதுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. என்எல்சி தலைவர் ராக்கேஷ்குமார், இயக்குநர்கள் வி.தங்கபாண்டியன், ஆர்.விக்ரமன், நாதள்ள நாக மகேஷ்வர் ராவ் ஆகியோர் விருதுகளையும், பரிசுகளையும் வழங்கினர்.
விழாவில், சுமார் 3,700 பள்ளிக் குழந்தைகள் பங்கேற்ற கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் சிறப்பான கலை நிகழ்ச்சியை வழங்கியதற்காக நெய்வேலி புனித அந்தோணியார் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளிக்கு சிறப்புப் பரிசு வழங்கப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com