ஜாக்டோ - ஜியோ நிர்வாகிகளை விடுவிக்க வேண்டும்

வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்ட ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் அனைவரையும்


வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்ட ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் அனைவரையும் விடுவிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் சங்கத்தின் சிறப்புத் தலைவர் கு.பாலசுப்பிரமணியன் வலியுறுத்தினார்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் சங்கத்தின் 2 நாள் மாநில மாநாடு கடலூரில் சனிக்கிழமை தொடங்கியது. மாநாட்டுக்கு சங்கத்தின் மாநிலத் தலைவர் பி.கே.சிவக்குமார் தலைமை வகித்தார். ஏஐடியூசி பொதுச் செயலர் எம்.சேகர் மாநாட்டை தொடக்கி வைத்து சிறப்புரையாற்றினார். பொதுச் செயலர் ரா.கோபிநாத், பொருளாளர் ச.சாகுல்அமீது ஆகியோர் அறிக்கை சமர்ப்பித்தனர். தொடர்ந்து 3 அமர்வுகளில் பிரதிநிதிகள் மாநாடு நடைபெற்றது. 
மாநாட்டு கருத்தரங்கில் சங்கத்தின் சிறப்புத் தலைவர் கு.பாலசுப்பிரமணியன், முன்னாள் மாநிலத் தலைவர் கு.பால்பாண்டியன், அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் ஆகியோர் பங்கேற்று பல்வேறு தலைப்புகளில் பேசினர். 
பின்னர், சிறப்புத் தலைவர் கு.பாலசுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: 
அரசுப் பணியாளர்கள், ஆசிரியர்களின் போராட்டம் குறித்து மாநாட்டில் விரிவாக விவாதித்தோம். அதன்படி, 8-ஆவது ஊதியக்குழு நிலுவைத் தொகையை ஜனவரி 2016 முதல் கணக்கிட்டு வழங்க வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 15 கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 30-ஆம் தேதி சென்னையில் கோட்டை நோக்கி பேரணி, மறியல் போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகளை கைது செய்ததைக் கண்டிக்கிறோம். கைது செய்யப்பட்ட அனைவரையும் விடுவிக்க வேண்டும். போராடும் ஆசிரியர்களுக்குப் பதிலாக மாற்று ஏற்பாடு செய்வதைவிட அவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்துவதே சிறந்தது.
அனைவரும் இணைந்து போராடினால்தான் வெற்றி பெற முடியும். எனவே, ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பானது தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கம் உள்ளிட்ட சங்கங்களையும் இணைத்துக் கொண்டு போராட வேண்டும் என்றார் அவர்.
சங்கத்தின் மாநில துணைத் தலைவர் கு.சரவணன், மாவட்ட செயலர் ஏ.வி.விவேகானந்தன், முன்னாள் மாவட்டச் செயலர் மு.ராஜாமணி உள்ளிட்டோர் உடனிருந்தனர். 
மாநாட்டில், ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெறும் நிகழ்வில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவனும், மாலையில் நடைபெறும் பொது மாநாட்டில் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசனும் பங்கேற்று பேசுகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com