நோட்டாவுக்கு வாக்களிக்க வேண்டாம்: கமல்ஹாசன்

பொதுமக்கள் நோட்டாவுக்கு வாக்களிக்கக் கூடாது என்று மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் கூறினார். 


பொதுமக்கள் நோட்டாவுக்கு வாக்களிக்கக் கூடாது என்று மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் கூறினார். 
கடலூர் மாவட்டத்தில் சனிக்கிழமை சுற்றுப்பயணம் மேற்கொண்ட கமல்ஹாசன் குணமங்கலம், அழகியநத்தம் ஆகிய கிராமங்களில் குடியரசு தினத்தையொட்டி நடைபெற்ற கிராம சபைக் கூட்டங்களில் பங்கேற்றார்.
பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கிராம ஊராட்சிக்கான தலைமை, அதன் தேவையை மக்களுக்கு எடுத்துக் கூற நான் புறப்பட்டு ஓராண்டாகிறது. அதனைத் தொடர்ந்து செய்து வருகிறோம். உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதை மக்கள் வலியுறுத்த வேண்டும்.
கிராம நிர்வாகம் நேர்மையாக நடைபெறுவதற்கான ஏற்பாடுகளை அரசு ஓரளவு செய்துள்ளது. அதனை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதை எடுத்துக்கூறவே கிராம சபைக் கூட்டம் நடத்தப்படுகிறது. உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாமல் கிராம சபைக் கூட்ட முடிவுகளை நிறைவேற்ற முடியாது. 25 ஆண்டுகளாக கிராம சபையை யாரும் கவனிக்கவில்லை. கடந்த பல ஆண்டுகளாக விவசாயிகள் புறந்தள்ளப்பட்டுள்ளனர். இந்த நிலை மாற நாங்கள் பாடுபடுவோம். அரசுக்கு எதிலும் அக்கறையில்லை என்றார் அவர். 
மீனவர்களுடன் சந்திப்பு: தொடர்ந்து, மாலையில் கடலூர் தேவனாம்பட்டினத்தில் மீனவர்களிடம் கமல்ஹாசன் பேசியதாவது: பொதுமக்கள் விழிப்புடன் இல்லையெனில் ஊழல் செய்வோரின் கூட்டம் அதிகரிக்கும். தேர்தலில் விருப்பமான கட்சிக்கு வாக்களியுங்கள். ஆனால், நோட்டாவுக்கு வாக்களிக்காதீர்கள். அது உங்களின் (மக்களின்) வெறுப்பைக் காட்டுகிறதே தவிர விருப்பத்தைத் தெரிவிக்கவில்லை. வாக்குக்குப் பணம் பெற்று 5 ஆண்டுகளை குத்தகைக்கு கொடுக்காதீர்கள். ஏன் செய்யவில்லை என்ற கேள்வியை அரசிடம் கேளுங்கள். இந்தக் கேள்வியை கேட்க வேண்டுமென்றால் ஓட்டுக்கு பணம் வாங்கக் கூடாது என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com