சுடச்சுட

  

  அரசுப் பணியாளர் சங்க மாநாட்டில் பங்கேற்பதை தவிர்த்த கமல்

  By DIN  |   Published on : 28th January 2019 04:01 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


  கடலூரில் நடைபெற்ற தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்க மாநாட்டில் பங்கேற்பதை கமல்ஹாசன் தவிர்த்ததால் ஏற்பாட்டாளர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
  தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கத்தின் 2 நாள் மாநில மாநாடு கடலூரில் சனிக்கிழமை தொடங்கி நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெறும் பொதுமாநாட்டில் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் பங்கேற்பதாக அறிவிக்கப்பட்டது.
  இதற்கேற்ப கமல்ஹாசன் கடலூர் மாவட்டத்தில் 2 நாள்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். சனிக்கிழமை செய்தியாளர்கள் சந்திப்பின்போதும் மாநாட்டில் பங்கேற்க இருப்பதை உறுதிசெய்தார். மேலும், ஞாயிற்றுக்கிழமை காலை கட்சி சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியின்போதும் மாநாட்டு ஏற்பாட்டாளர்கள் கமலை சந்தித்துப் பேசினர்.
  இந்த நிலையில், தொண்டை பிரச்னை காரணமாக மாநாட்டில் கமல்ஹாசன் பங்கேற்கவில்லை என்ற தகவல் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. இதனால், அவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
  இதுகுறித்து அந்த சங்கத்தின் சிறப்புத் தலைவர் கு.பாலசுப்பிரமணியன் கூறியதாவது:
  மாநில மாநாட்டில் பங்கேற்க வேண்டுமென திமுக, காங்கிரஸ், மதிமுக, பாமக, விசிக, தேமுதிக, மக்கள் நீதி மய்யம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தமாகா, நாம் தமிழர் ஆகிய 10 கட்சிகளுக்கு அழைப்பு விடுத்தோம். இதில், பாமக, தேமுதிக கட்சியினர் மாநாட்டில் பங்கேற்க வாய்ப்பில்லை என ஏற்கெனவே தெரிவித்துவிட்டனர். கமல் தொண்டை பிரச்னை என காரணம் தெரிவித்துள்ள நிலையில், தொல்.திருமாவளவன் ஏதும் கூறவில்லை. அவர்கள் அடுத்த மாநாட்டில் பங்கேற்பார்கள் என்று நம்புகிறோம். மாநாட்டில் மதிமுக மட்டுமே பங்கேற்றது. மற்ற கட்சிகள் பங்கேற்கவில்லை என்றார் அவர்.
  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒரு பிரிவாக இயங்கி வந்த தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கத்தில் பல்வேறு பிளவுகள் ஏற்பட்டுள்ளன.
  இதில், தற்போது கு.பாலசுப்பிரமணியன் தலைமையில் இயங்கும் பிரிவு, கட்சித் தலைமையுடன் வேறுபட்டிருப்பதால் இந்த மாநாட்டில் மற்ற கட்சிகள் பங்கேற்பது தடுக்கப்பட்டதாக நிர்வாகிகள் புகார் தெரிவித்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai