சுடச்சுட

  

  தமிழக அரசியலில் மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர் என மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் கூறினார்.
   கடலூரில் மக்கள் நீதி மய்யம் சார்பில் சான்றோன் விருது வழங்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்வில் விருதுகளை வழங்கி கட்சித் தலைவர் கமல்ஹாசன் பேசியதாவது:
   காந்தியை பிடிக்காதவர்கள் கூட அவரது கொள்கையை கைத்தடியாகப் பிடிக்காமல் நடக்க முடியாது. வீரத்தின் உச்சமே அகிம்சைதான். காந்தியை இளம் பருவத்தில் விமர்சித்த நான் வாழ்வையும், துரோகத்தையும் சந்தித்த பிறகே காந்தியத்தை புரிந்துகொள்ள முடிந்தது.
   தமிழர்கள் தேசிய நீரோட்டத்தில் இணைவதில்லை; மொழிப் பிரச்னை, திராவிடம் பேசுகிறார்கள் என வட மாநிலத்தவர்கள் கூறுகின்றனர்.
   தமிழகத்தில் காந்தி, நேரு, சுபாஷ் ஆகிய பெயர் கொண்டவர்களை காணலாம். ஆனால், காமராஜர், கக்கன், அண்ணா போன்றவர்களின் பெயர்களை வடமாநிலத்தில் ஒருவராது வைத்திருக்கிறார்களா?
   மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து கேட்கிறார்கள். எனது தற்போதைய நோக்கமெல்லாம் தமிழகம்தான். தமிழகம் முன்னேற்றப்பட்டால் இந்தியாவே திரும்பிப் பார்க்கும். மக்களை நோக்கி அரசு துப்பாக்கி ஏந்த வைத்ததற்கு நாம் கேள்வி எழுப்பாததே காரணம் என்றார் அவர்.
   பின்னர் மாலையில் செய்தியாளர்களிடம் கமல்ஹாசன் கூறியதாவது: கடந்த 40 ஆண்டுகால தமிழக அரசியலில் ரெüடிகள் ஆதிக்கமே உள்ளது. தூய்மையான அரசியலை அனைவரும் இணைந்துதான் ஏற்படுத்த முடியும். திராவிடம் என்பது 2 கட்சிகளுக்கும், 3 குடும்பத்துக்கும் மட்டும் சம்பந்தமுடையதல்ல. அது ஒரு தேசியம் சார்ந்தது. மக்களை நான் சந்தித்து வரும் நிலையில் அவர்கள் அரசியலில் மாற்றத்தை விரும்புவது தெரிகிறது. எங்களை வெளியிலிருந்து யாரும் இயக்கவில்லை. நாங்களே இயங்குகிறோம்.
   பிரதமருக்கு எதிரான "கோ-பேக்' முழக்கம், கருப்புக்கொடி காட்டுவது சாதாரண அரசியல் விஷயம்தான். ஆனால், இதை எதற்காகச் செய்கின்றனர் என்பதை பிரதமர் கவனத்தில் கொள்ள வேண்டும். தேர்தல் கூட்டணி குறித்து கட்சி நிர்வாகிகளுடன் பேசி வருகிறேன் என்றார் கமல்ஹாசன்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai