சுடச்சுட

  

  நகராட்சி துப்புரவுப் பணியாளர்களுக்கு வீடு கட்டித் தர நடவடிக்கை: தேசிய ஆணைய உறுப்பினர் தகவல்

  By DIN  |   Published on : 29th January 2019 09:32 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  நகராட்சி துப்புரவுப் பணியாளர்களுக்கு வருகிற 2022-ஆம் ஆண்டுக்குள் வீடு கட்டித் தர நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய துப்புரவுப் பணியாளர் ஆணைய உறுப்பினர் ஜெகதீஷ் கிர்மானி கூறினார்.
   கடலூர் மாவட்டத்தில் உள்ள நகராட்சிப் பகுதிகளில் திங்கள்கிழமை அவர் ஆய்வு மேற்கொண்டார். கடலூர் பேருந்து நிலையத்தில் ஆய்வு செய்த அவர், அங்கு சுகாதாரம் இல்லாதது குறித்து அதிருப்தி தெரிவித்தார். அங்குள்ள கழிப்பறை அசுத்தமாக இருந்ததால், அதற்கு பொறுப்பான 2 அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரைத்தார்.
   தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நகராட்சி துறையினர், மருத்துவத் துறையினர், துப்புரவுப் பணியாளர்களுடன் கலந்தாய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் ஜெகதீஷ் கிர்மானி கூறியதாவது:
   கடலூர் மாவட்டத்தில் 2015-ஆம் ஆண்டு முதல் இதுவரை 7 துப்புரவுத் தொழிலாளர்கள் புதை சாக்கடை குழிக்குள் இறங்கி சுத்தம் செய்தபோது உயிரிழந்துள்ளனர். இவர்களில் 5 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. மற்றவர்களுக்கும் ஒரு வாரத்துக்குள் நிதியை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் கழிவுகளை மனிதர்கள் கைகளால் அள்ளும் நிலை இல்லையென மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஆனால், ஆய்வின்போதும் அந்த நிலை இன்னமும் இருப்பதை அறிந்தேன். எனவே, கழிவுகளை கைகளால் அள்ளும் நிலையில் உள்ள தொழிலாளர்களுக்கு உடனடியாக ரூ.40 ஆயிரமும், அவர்களின் மறுவாழ்வுக்கான நிதியாக இயந்திரம் வாங்குவதற்கு ரூ.20 லட்சமும் வழங்கப்பட வேண்டும்.
   துப்புரவுப் பணியில் ஈடுபடும் நிரந்தர, ஒப்பந்தத் தொழிலாளர்கள் அனைவருக்கும் பதவி உயர்வு, ஊதிய உயர்வு, அவர்களுக்கான கல்விக் கடன், வருங்கால வைப்பு நிதி, மருத்துவ வசதி ஆகியவை செய்து தரப்பட வேண்டும். இதனை அந்தந்த உள்ளாட்சி நிர்வாகங்கள் கண்காணிக்க வேண்டும். கடலூர் நகராட்சியில் துப்புரவுப் பணியாளர்களுக்கு ஒரு நாளுக்கு ரூ.360 வீதம் சம்பளமாக நிர்ணயித்து ஒப்பந்ததாரருக்கு வழங்கப்படும் நிலையில், அவர் தொழிலாளர்களுக்கு ரூ.200 மட்டுமே வழங்குகிறார். எனவே, அந்த ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். ஒப்பந்தத் தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்வது குறித்து தமிழக முதல்வர், தலைமைச் செயலக அலுவலர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும்.
   சுகாதாரப் பணியாளர்களுக்கு மத்திய அரசு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. அதன்படி, 2022-ஆம் ஆண்டுக்குள் அவர்களுக்கு சொந்தமாக வீடு கட்டித் தரப்படும். மேலும், அவர்களின் பொருளாதாரத்தை முன்னேற்றும் வகையில், ஆணையத்தின் மூலமாக நிதி மேலாண்மை வாரியம் உருவாக்கப்பட்டது. இந்த வாரியம் தாட்கோ மூலமாக கடன் வழங்கி வருகிறது. இதுதொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த வலியுறுத்தப்பட்டுள்ளது. அனைத்து நகராட்சிகளிலும் கழிவுக் குழிகளில் மனிதர்கள் இறங்காத நிலையை ஏற்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து அடுத்த மாதம் மீளாய்வு செய்யப்படும். அதில் ஏதேனும் குறைபாடு இருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai