சுடச்சுட

  

  நிலம் கையக முடிவை என்எல்சி கைவிட வேண்டும்: தொல்.திருமாவளவன்

  By DIN  |   Published on : 29th January 2019 09:33 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  என்எல்சி இந்தியா நிறுவனம் 3-ஆம் சுரங்கம் அமைக்கும் பணிக்கு நிலம் கையகப்படுத்தும் முடிவைக் கைவிட வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தினார்.
   கடலூர் மாவட்டம், நெய்வேலியில் உள்ள என்எல்சி இந்தியா நிறுவனம் 3-ஆம் சுரங்கம் அமைக்க அந்தப் பகுதியில் 26 கிராமங்களில் நிலங்களைக் கையகப்படுத்த முடிவு செய்துள்ளது. இதைக் கண்டித்து, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் நெய்வேலியை அடுத்த மந்தாரக்குப்பத்தில் 2-ஆம் சுரங்கம் அருகே திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் தெற்கு மாவட்டச் செயலர் பால.அறவாழி தலைமை வகித்தார்.
   ஆர்ப்பாட்டத்தில் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் பேசியதாவது:
   என்எல்சி நிறுவனத்துக்காக வீடு, நிலம் வழங்கியவர்களுக்கு அந்த நிறுவனத்தில் உரிய வேலைவாய்ப்பு இதுவரை வழங்கப்படவில்லை. அந்த நிறுவனத்தில் பணிபுரியும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் 10 ஆயிரம் பேர் பணி நிரந்தரம் செய்யப்படவில்லை. என்எல்சி சுரங்கங்களில் இருந்து அதிகளவில் நிலத்தடி நீரை வெளியேற்றுவதால் நிலத்தடி நீர்மட்டம் மிகவும் குறைந்துவிட்டது. இதனால், இந்தப் பகுதியில் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
   இந்த நிலையில், தற்போது, 3-ஆவது சுரங்கத்துக்காக விவசாய நிலங்களைக் கையகப்படுத்த உள்ளதை ஏற்க முடியாது. என்எல்சி நிறுவனம் மின்சாரம் தயாரிக்க சூரிஒளி போன்ற மாற்று ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்.
   மனிதன் வாழ தட்பவெட்ப நிலை மிகவும் அவசியம். பூமியின் கனிம வளங்களை தற்போதே அனுபவித்து லாபம் பார்க்க மத்திய அரசு முயற்சிக்கிறது. விவசாயத்தை அழிக்கும் எந்த ஒரு திட்டமும் எங்களுக்குத் தேவையில்லை.
   எனவே, என்எல்சி நிறுவனம் நிலம் கையகப்படுத்தும் முடிவைக் கைவிட வேண்டும். நிலத்தைக் கையகப்படுத்தினால் கடுமையான போராட்டங்களை நடத்துவோம். மக்கள் ஒற்றுமையாக இருந்தால் 3-ஆம் சுரங்கம் அமைப்பதைத் தடுக்கலாம்.
   நரேந்திர மோடி மீண்டும் பிரதமரானால் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு நாட்டை தாரை வார்த்துவிடுவார். அதை முறியடிக்க வேண்டும். மத்திய அரசு ஆசை வார்த்தை, சலுகைகளைக் கூறி மக்களை மயக்கிவிடும் என்றார் அவர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai