வருவாய்த் துறையிலும் மாற்று நியமனம்: கணக்கெடுப்புப் பணியில் மாவட்ட நிர்வாகம்

பள்ளி ஆசிரியர்களைத் தொடர்ந்து வருவாய்த் துறையிலும் மாற்று நியமனம் செய்வதற்கான கணக்கெடுப்புப் பணியை கடலூர் மாவட்ட நிர்வாகம் தொடங்கியுள்ளது.

பள்ளி ஆசிரியர்களைத் தொடர்ந்து வருவாய்த் துறையிலும் மாற்று நியமனம் செய்வதற்கான கணக்கெடுப்புப் பணியை கடலூர் மாவட்ட நிர்வாகம் தொடங்கியுள்ளது.
 அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 22-ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
 இதனால், கடலூர் மாவட்டத்தில் அரசு, அரசு நிதி உதவிபெறும் பள்ளிகளில் கல்விப் பணி கடும் பாதிப்பைச் சந்தித்துள்ளது. அதேபோல அரசுப் பணிகளிலும் மிகப்பெரும் தொய்வு ஏற்பட்டுள்ளது. எனவே, மாற்று ஏற்பாடுகளில் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. அதன்படி, கல்வித் துறையில் 12 ஆசிரியர்களை தற்காலிக பணியிடை நீக்கம் செய்துள்ளதோடு, மற்ற பள்ளிகளில் புதிய ஆசிரியர்களை நியமிக்க விண்ணப்பங்களை பெற்று வருகிறது. மேலும், மூடப்பட்டுள்ள பள்ளிகளை திறக்கவும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதன் விளைவாக கடலூர் மாவட்டத்தில் மொத்தமுள்ள அரசு, அரசு நிதிஉதவி பெறும் 304 உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளும் திறந்திருந்ததாக முதன்மைக்கல்வி அலுவலர் கா.பழனிச்சாமி கூறினார்.
 அதேநேரத்தில், மொத்தமுள்ள 1,366 தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் 731 பள்ளிகள் போராட்டத்தால் மூடப்பட்டிருந்தன. இந்தப் பள்ளிகளை திறக்க சிறப்பாசிரியர்கள், ஆசிரியர் பயிற்சிப் பள்ளி மாணவர்கள் மூலமாக நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
 கடலூர் மாவட்டத்தில் அரசுப் பணி, ஆசிரியர் பணியில் மொத்தம் 30,665 பேர் உள்ளனர். இவர்களில் தற்போது நடைபெற்று வரும் தொடர் போராட்டத்தில் 7,582 பேர் பங்கேற்றுள்ளதாக மாவட்ட நிர்வாகத்தின் புள்ளி விவரம் தெரிவிக்கிறது. இது 24.73 சதவீதமாகும். கடந்த சில நாள்களாக இருந்த புள்ளிகளை விட தற்போது குறைந்துள்ளது. மொத்த எண்ணிக்கையில், கல்வித் துறையினர் மட்டுமே 10,946 பேர்களாவர். இவர்களில் 6,691 பேர் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
 பணிக்கு வராத மொத்த ஊழியர்கள் 7,582 பேரில் வருவாய் உள்ளிட்ட பிற துறையினர் மொத்தம் 891 பேர் மட்டுமே.
 இவர்கள் குறித்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. அவர்களில் தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்களை கண்டறிந்து, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் மாவட்ட நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. நடவடிக்கைக்குப் பின்னர் அவர்கள் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டு அந்த இடத்தில் புதிய பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு நிரப்பப்படுவார்கள் என்றும், அதற்கான ஆயத்தப் பணியில் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டுள்ளதாகவும் ஆட்சியர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com