ஜாக்டோ - ஜியோ போராட்டம்: கைதான 70 பேரை அடையாளம் காண்பதில் சிக்கல்

மறியலில் ஈடுபட்டுக் கைதான ஜாக்டோ-ஜியோவினரை அடையாளம் காண்பதில் சிக்கல் நீடிப்பதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மறியலில் ஈடுபட்டுக் கைதான ஜாக்டோ-ஜியோவினரை அடையாளம் காண்பதில் சிக்கல் நீடிப்பதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
 9 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஜாக்டோ- ஜியோ கூட்டமைப்பினரை காவல் துறையினர் கைது செய்து மாலையில் விடுவித்து வந்தனர்.
 இருப்பினும், போராட்டத்தில் முக்கியமானவர்களாகக் கருதப்படும் 6 பேரை கடந்த வெள்ளிக்கிழமை கைது செய்தனர். அதன் தொடர்ச்சியாக திங்கள்கிழமை 70 பேர் கைது செய்யப்பட்டு கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
 இந்த நிலையில், கைதானவர்களில் எத்தனை பேர் ஆசிரியர்கள், எத்தனை பேர் அரசு ஊழியர்கள் என்ற விவரம் தெரியவில்லை. இதுதொடர்பாக கல்வித் துறையிடம் கேட்டபோது, கைது செய்யப்பட்டவர்கள் குறித்த விவரம் காவல் துறையிடம் இருந்து வரப்பெறவில்லை. அந்த விவரம் வரப்பெற்றால் மட்டுமே அவர்கள் மீது பணியிடை நீக்கம் என்ற நடவடிக்கையை எடுக்க முடியும் என்றனர்.
 இதற்கிடையே, காவல் துறையினர் தரப்பில் கூறுகையில், கைது செய்யப்பட்டு தனியார் மண்டபத்தில் வைத்திருந்த போது அவர்கள் தங்களது பெயரை சிறு சிறு மாற்றங்களுடனும், தவறான முகவரியையும் தெரிவித்துள்ளதோடு, பணி குறித்த விவரத்தை தெரிவிக்கவில்லை. இதனால், அவர்களை அடையாளம் காண்பதில் சிக்கல் நீடிக்கிறது என்றனர்.
 இந்த நிலையில், சிறையில் அடைக்கப்பட்டவர்களுக்கு நீதிமன்றம் பிணை வழங்கியதைத் தொடர்ந்து, ஜாக்டோ ஜியோவினர் கடலூர் மத்திய சிறைக்குச் சென்று மாலையில் அழைத்து வந்தனர். பிணையில் உள்ளவர்கள் தங்களது பகுதிக்கு உள்பட்ட காவல் நிலையத்தில் ஒரு வாரத்துக்கு கையெழுத்திட வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com