சுடச்சுட

  

  மானாவாரி உளுந்து மகசூல் அமோகம்: விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி

  By DIN  |   Published on : 31st January 2019 09:56 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பண்ருட்டி வட்டாரத்தில் மானாவாரியில் விதைப்பு செய்யப்பட்ட உளுந்து மகசூல் அதிகரித்ததாலும், 100 கிலோ மூட்டை ரூ. 5,200 வரை விலை போவதாலும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
   பண்ருட்டி வட்டாரத்துக்கு உள்பட்ட காடாம்புலியூர், ஆண்டிக்குப்பம், பணிக்கன்குப்பம், மருங்கூர், முத்தாண்டிக்குப்பம், வல்லம், காட்டுப்பாளையம், பேர்பெரியான்குப்பம், காட்டுக்கூடலூர், கீழக்குப்பம், நடுக்குப்பம், தோப்புக்கொல்லை உள்ளிட்ட ஏராளமான கிராமப் பகுதியில் உள்ள முந்திரி காடுகளுக்கு இடையே கம்பு, கேழ்வரகு, உளுந்து, காராமணி, கொள்ளு உள்ளிட்ட பயிர்கள் மானாவாரி விவசாயம் செய்யப்படுவது வழக்கம்.
   தொடர்ந்து வந்த காலகட்டத்தில் கால்நடைகள் கட்டி பராமரிக்கப்படாத நிலையில், கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக மானாவாரி விவசாயம் கைவிடப்பட்டது. இதனால், சிறு தானியம், பயறு வகைகள் உற்பத்தி குறைந்ததுடன், விவசாயிகளுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டது.
   இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாக மீண்டும் மானாவாரியில் உளுந்து பயறு விவசாயம் செய்ய தொடங்கியுள்ளனர்.
   நிகழாண்டு மானாவாரியில் விதைக்கப்பட்ட உளுந்து அபார மகசூல் கண்டது. பண்ருட்டி வட்டாரத்தில் சுமார் 5 ஆயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட பரப்பளவில் உளுந்து விதைப்பு செய்யப்பட்டது. மழை பொழிவு சராசரி அளவைவிட குறைந்திருந்தாலும், மானாவாரி உளுந்து வளர்ச்சிக்கு ஏற்ற வகையில் அவ்வப்போது பெய்த மழையால் உளுந்து செடிகள் செழித்து வளர்ந்து மகசூல் அதிகரிக்க காரணமாக அமைந்தன.
   இதுகுறித்து, விவசாயிகள் கீழக்குப்பம் எஸ்.காசி, தொப்பயங்குளம் கே.தனஞ்செயன் ஆகியோர் கூறியதாவது: ஒரு கிலோ விதை உளுந்து ரூ. 100 ஏக்கருக்கு 8 கிலோ தேவை. ஏர் உழுது விதைப்பு வரை சுமார் ரூ. 2,500 செலவாகும். ஆடி பட்டத்தில் விதைப்பு செய்தோம். சீரான மழை, இதமான தட்பவெப்ப நிலை காரணமாக நல்ல விளைச்சல் கிடைத்தது.
   தற்போது, உளுந்து அறுவடை தீவிரம் அடைந்துள்ளது. ஏக்கர் ஒன்றுக்கு 300 முதல் 400 கிலோ மகசூல் கிடைத்துள்ளது. பண்ருட்டியில் உள்ள வியாபாரிகளிடம் கொண்டு வந்து விற்பனை செய்து வருகிறோம். கடந்த வாரம் 100 கிலோ மூட்டை ஒன்று ரூ. 5,050 வரையில் விலை போனது. தற்போது, ரூ. 5,200-ஆக உயர்ந்துள்ளது. உளுந்துக்கு நல்ல விலை கிடைத்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்றனர் அவர்கள்.
   உளுந்து அறுவடை தீவிரம் அடைந்துள்ள நிலையில், நாள் ஒன்றுக்கு நூற்றுக்கணக்கான உளுந்து மூட்டைகள் விற்பனைக்காக குவிந்தவண்ணம் உள்ளன.
   எனினும், கால்நடைகள் கட்டி பராமரிக்கப்படாத காரணத்தால், இந்த முறை காடாம்புலியூர், மேல்மாம்பட்டு கிராமப் பகுதியில் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் மானாவாரி உளுந்து விதைப்பு செய்யப்படவில்லை.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai