ரோந்து செல்லும் காவல் துறையினரைக் கண்காணிக்க புதிய செயலி

கடலூரில் ரோந்துச் செல்லும் காவல் துறையினரைக் கண்காணிக்கும் புதிய செயலியை மாவட்டக் கண்காணிப்பாளர் ப.சரவணன் புதன்கிழமை தொடக்கிவைத்தார்.

கடலூரில் ரோந்துச் செல்லும் காவல் துறையினரைக் கண்காணிக்கும் புதிய செயலியை மாவட்டக் கண்காணிப்பாளர் ப.சரவணன் புதன்கிழமை தொடக்கிவைத்தார்.
 காவல் துறையின் முக்கியப் பணிகளில் ஒன்று மாவட்ட எல்லைகளுக்கு உள்பட்ட பகுதிகளில் ரோந்துச் செல்வது. இவ்வாறு, பணியில் ஈடுபடுவோர் அந்தப் பகுதிக்குச் சென்றாரா என்பதைக் கண்டறிவதற்காக ஒவ்வோர் பகுதியிலும் ரோந்து பட்டா புத்தகம் வைக்கப்பட்டு, அதில் ரோந்துச் செல்லும் காவலர்கள் கையெழுத்திட வேண்டும். ஆனால் இதில், பல்வேறு நடைமுறைச் சிக்கல்கள் இருப்பதும், சிலர் இதைத் தவறாகப் பயன்படுத்துவதும் நடைமுறையில் இருந்து வருகிறது.
 இதைக் களைய தற்போது "எக்ஸ்சன்' என்ற மென்பொருள் நிறுவனம் புதிய செயலி ஒன்றை உருவாக்கியுள்ளது. இதைக் காவலர்கள் தங்களது ஆன்ட்ராய்டு செல்லிடப்பேசியில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். விரைவுக் குறியீடுடன் (க்யூஆர் கோடு) இயங்கும் வகையில் இந்தச் செயலி (இ-பட்டா) வடிவமைக்கப்பட்டுள்ளது. ரோந்து செல்லும் பகுதியில் பட்டா புத்தகம் உள்ள பகுதியில் விரைவுக் குறியீட்டுன் கூடிய சுவரொட்டி ஒட்டப்பட்டிருக்கும்.
 ரோந்துச் செல்லும் காவலர்கள் அந்த சுவரொட்டியிலுள்ள விரைவுக் குறியீடை தங்களது ஆன்ட்ராய்டு செல்லிடப்பேசியில் கேமரா மூலம் ஸ்கேன் செய்தால், அதில் அவர் அந்தப் பகுதிக்கு வந்த நேரம், பெயர் முதலியவை பதிவாகி விடும்.
 இந்தச் செயலியை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி கடலூர் மஞ்சக்குப்பத்தில் புதன்கிழமை நடைபெற்றது. மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ப.சரவணன் செயலியை தொடக்கிவைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
 கடலூர் மாவட்டத்தில் கடலூர் புதுநகர், திருப்பாதிரிபுலியூர் காவல் நிலையங்களுக்கு உள்பட்ட தலா 70 இடங்களில் முதல் கட்டமாக இந்தச் செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ரோந்து செல்லும் காவலர்களுக்கு இதுகுறித்து விளக்கப்பட்டுள்ளது. இந்தச் செயலியில் 70 இடங்களும் அதன் அட்ச, தீர்க்க ரேகையுடன் பதிவு செய்யப்பட்டிருப்பதால், வேறு இடங்களுக்கு எடுத்துச் சென்று பதிவு செய்ய முடியாது.
 அவ்வாறு பதிவு செய்தால் எவ்வளவு தொலைவில் இருந்து பதிவு செய்யப்படுகிறது என்ற விவரமும் அதில் பதிவாகி விடும். இந்த விவரங்கள் அனைத்தும் காவல் ஆய்வாளர் முதல் எஸ்.பி. வரையிலான அதிகாரிகளுக்கு உடனுக்குடன் சென்று விடும்.
 அடுத்த கட்டமாக கடலூர் முதுநகர், சிதம்பரம், விருத்தாசலம் காவல் நிலையங்களிலும், தொடர்ந்து அனைத்துக் காவல் நிலையங்களிலும் இது நடைமுறைப்படுத்தப்படும் என்றார் அவர் எஸ்.பி. சரவணன்.
 திருச்சியில் வங்கிக் கொள்ளை நடைபெற்றதையடுத்து, கடலூர் மாவட்டத்திலும் வங்கியாளர்களை அழைத்து, போதுமான பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தப்படும் என்றும் எஸ்.பி. தெரிவித்தார்.
 நிகழ்வின் போது, செயலியை உருவாக்கிய மென்பொருள் நிறுவனத்தின் நிர்வாகி எஸ்.சரண்ராஜ், காவல் ஆய்வாளர் த.கி.சரவணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com