சுடச்சுட

  

  மருத்துவத் துறைக்கு புதிய வாகனங்கள்: அமைச்சர் தொடக்கிவைத்தார்

  By DIN  |   Published on : 02nd July 2019 08:37 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கடலூர் மாவட்ட மருத்துவத் துறைக்கு வாகனங்கள் உள்ளிட்ட ரூ.36 லட்சம் மதிப்பிலான பொருள்களை அமைச்சர் எம்.சி.சம்பத் அண்மையில் வழங்கினார்.
   கடலூர் மாவட்ட மருத்துவத் துறைக்கு தமிழக அரசு சார்பில் மருத்துவ உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், தமிழக தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் பங்கேற்று பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத் துறை சார்பில் ரூ.11.69 லட்சத்தில் மருத்துவ கருவிகளை ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு வழங்கினார். மேலும், ரூ.24.60 லட்சத்தில் மருத்துவ பயன்பாட்டுக்கான வாகனங்களையும் வழங்கினார்.
   இதில், மாநில சமச்சீர் வளர்ச்சி நிதியின்கீழ் மாவட்டத்தில் பின்தங்கிய வட்டாரங்களான மங்களூர், நல்லூர், காட்டுமன்னார்கோவில் ஆகியவற்றில் உள்ள கிராமப் பகுதிகளில் நோய்த் தடுப்பு பணிகளை (புகை மருந்து தெளித்தல், மருந்து பொருள்களை கொண்டு செல்வதற்கு) விரைவாக மேற்கொள்ளும் பொருட்டு தலா ரூ.8 லட்சத்தில் மருத்துவ முகாமுக்கு செல்வதற்கான 3 வாகனங்கள் வழங்கப்பட்டன. அனைவருக்கும் நல்வாழ்வு திட்டத்தின் கீழ் காட்டுமன்னார்கோவில் வட்டாரத்தில் உள்ள அனைத்து துணை சுகாதார நிலையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் சேகரிக்கப்படும் நோயாளிகளின் ரத்த மாதிரிகளை பாதுகாப்பாக வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டுச் செல்ல ரூ.60 ஆயிரத்தில் இருச்சக்கர வாகனம் காட்டுமன்னார்கோயில் வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு வழங்கப்பட்டது.
   மாவட்ட கனிம வளத் துறை நிதி மூலமாக ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிகிச்சை பெற வரும் நோயாளிகள் பயன்பெறும் விதமாக மல்டிபாரா மீட்டர், இசிஜி ஆகிய கருவிகள் கம்மாபுரம் வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்துக்கும், குடும்ப நல அறுவை சிகிச்சை மேற்கொள்ள மருங்கூர் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு லேப்ராஸ்கோபி கருவி ஆகியவை மொத்தம் ரூ.11.69 லட்சத்தில் வழங்கப்பட்டன.
   நிகழ்ச்சியில் சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் எஸ்.கீதா, மருத்துவப் பணிகள் இணை இயக்குநர் கலா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
   
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai