மணல் குவாரியை மீண்டும் இயக்கக் கோரி மனு

ஆயிப்பேட்டை மணல் குவாரியை மீண்டும் இயக்கக் கோரி, மாட்டுவண்டித் தொழிலாளர்கள் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனர்.

ஆயிப்பேட்டை மணல் குவாரியை மீண்டும் இயக்கக் கோரி, மாட்டுவண்டித் தொழிலாளர்கள் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனர்.
 கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில், மாவட்ட மாட்டுவண்டித் தொழிலாளர்கள் சங்கம் (சிஐடியூ) சார்பில், சிஐடியூ மாவட்டச் செயலர் பி.கருப்பையன், மாட்டுவண்டித் தொழிலாளர்கள் சங்கத்தின் மாவட்டச் செயலர் வி.திருமுருகன் ஆகியோர் நெற்றியில் நாமம் தரித்துக்கொண்டு வந்து மனு அளித்தனர். அதில் தெரிவித்துள்ளதாவது:
 சிதம்பரம் வட்டம், ஆயிப்பேட்டையில் பலகட்டப் போராட்டங்களுக்கு பிறகு அரசு அனுமதியுடன் மாட்டு வண்டிகளுக்கான மணல் குவாரி திறக்கப்பட்டு, உரிய விதிமுறைகளுடன் செயல்பட்டு வந்தது.
 இந்த நிலையில் கடந்த 10 நாள்களாக மணல் குவாரி இயக்கப்படவில்லை. குவாரி அமைந்துள்ள ஆயிப்பேட்டை கிராம மக்கள் எதிர்ப்புத் தெரிவிக்காத நிலையில், அருகே உள்ள பகுதிகளில் செங்கல் சூளை நடத்தி வருபவர்கள் பிரச்னை செய்து வருகின்றனர். மணல் குவாரி செயல்படாததால் கட்டுமானத் தொழில் பாதிக்கப்படுவதுடன், மாட்டு வண்டித் தொழிலாளர்களின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகி உள்ளது. எனவே, அரசு அனுமதித்துள்ள மணல் குவாரியை தொடர்ந்து இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அந்த மனுவில் கோரியுள்ளனர்.
 மாட்டு வண்டித் தொழிலாளர்கள் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.பொன்னம்பலம், பொருளாளர் வி.செல்வராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com